சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்; 13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி 7 பேர் பலாத்காரம்: 2 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
சேலம்: சேலத்தில் 13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கி, 7 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், 4 பேரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர். சேலம் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, 9ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வந்தார். அவருக்கு 10ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி உள்பட 3 பேர் பழக்கமான நிலையில், ஒரு குழுவாக சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில், இந்த சிறுமிகளுக்கு மது குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதில், 13 வயது சிறுமிக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே பாலியல் ரீதியாக நெருக்கமான உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, 13 வயது சிறுமியின் நடவடிக்கைகளால் வேதனையடைந்த அவரது தாய், தனது மகளுக்கு போதை பழக்கம் இருப்பதாக, சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், அவர்கள் அந்த சிறுமியை மீட்டு விசாரித்த போது, அந்த சிறுமியை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். இதில், 17 வயது சிறுமியின் அண்ணன், 13 வயது சிறுமிக்கு பீர் வாங்கி கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த சிறுமியின் காதலன், நண்பர் என தொடர்ச்சியாக 7 பேர், பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, 17 வயது சிறுமியின் அண்ணன் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 2 பேர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 2 பேர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், `17 வயது சிறுமியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், தோழிகள் அனைவரும் பீர் குடித்துள்ளனர். இவர்கள் அவ்வப்போது பீர் மற்றும் கூலிப் உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த 13 வயது சிறுமியை போதைக்கு அடிமையாக்கி, தொடர்ச்சியாக பாலியல் உறவுக்கு பயன்படுத்தியுள்ளனர். அவரது தோழியிடம் விசாரித்தால், இன்னும் பல தகவல்கள் வெளியாகும். அவர்களும் இதுபோன்ற பாலியல் உறவுக்கு பயன்படுத்தப்பட்டார்களா? என்பதும் தெரியவரும்’ என்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சிறுவர்களின் பெற்றோர், நேற்று டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனுக்கு திரண்டு வந்தனர். அவர்களில் ஒரு பெண் கூறுகையில், `புகார் கொடுத்த பெண்ணுக்கு கஞ்சா, மது குடிக்கும் பழக்கம் இருக்கிறது. அந்த பெண்ணிடம் யாரெல்லாம் தவறாக நடந்து கொண்டார்கள் என போலீஸ் கேட்டவுடன், எல்லோரையும் கைகாட்டி விட்டுள்ளார். இதனால், எனது மகனையும் கைது செய்து விட்டனர். அந்த பழக்கத்திற்கு எனது மகன் சரிப்பட்டு வர மாட்டான். இதில் தீர விசாரிக்காமல், சிறுவர்களையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் விசாரிக்க வேண்டும்,’ என்றார். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



