புதுடெல்லி: வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்ததில் பலர் உயிரிழந்தனர். இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா(78),அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். ஹசீனாவை நாடு கடத்த வங்கதேசம் தொடர்ந்து கோரி வருகிறது. ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
இதற்கிடையே இன்று டெல்லியில் உள்ள தெற்காசிய வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பத்திரிகையாளர்களுடன் அவர் உரை நிகழ்த்துகிறார். இது குறித்து வங்கதேசத்தின் வெளியுறவு இணை அமைச்சர் ஷாமா ஒபேத் இஸ்லாம் பேசுகையில், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஒருவர் இது போன்ற அரசியல் உரை ஒன்றை நிகழ்த்துவது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவை பாதிக்கும் என தெரிவித்தார்.
இதுபற்றி ஒன்றிய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் நேற்று கூறுகையில், ‘‘ஷேக் ஹசீனாவின் பத்திரிகையாளர் சந்திப்பு ஒரு தனியார் ஊடக நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் இந்திய அரசுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை” என்றார்.


