பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் , சீண்டல்கள், பல்வேறு துன்பங்கள், வன்முறைகள் என தலைவிரித்து ஆடிவரும் வேலையில் தனக்கான சமூக அக்கறையுடன் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல் என்கிற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தனது சொந்த செலவில் குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டிருக்கிறார் சமூக சேவகி மணிமேகலை. மத்திய அரசு பணியில் இருந்த காலம் முதலே பல்வேறு சமூக சேவைகளில் தன்னை ஈடுபடுத்தி வந்தவர். தன் பணி ஓய்வு காலத்திற்கு பிறகும் தனது சொந்த பணத்தில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் சமூக சேவகி மணிமேகலை.
பெண்மையை போற்றும் விதமாக இவருடைய ‘‘bhim production'' இல் உருவான ‘‘இவள் வேற மாதிரி” பணியிடங்களில் பெண்களுக்கான பாலியல் சீண்டல்கள் குறித்து பேசுகிறது. இவர் தனது சமூக சேவை மற்றும் தனது குறும்படம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.
உங்களை பற்றி...
நான் சிறு வயது முதலே சமூக சேவை செய்வதில் ஈடுபாடு அதிகம் கொண்டவள். எனது பெற்றவர்கள் சமூக சேவையை தங்கள் வாழ்வாக கொண்டவர்கள். எனது கணவரும் பிள்ளைகளும் கூட நான் சமுக சேவை செய்வதற்கு நிறைய உதவுபவர்கள் தான். இப்படியான குடும்ப சூழலில் சமூக சேவையை எனது வாழ்வின் அங்கமாகவே மாற்றிக்கொண்டு இயங்கி வருகிறேன். நான் பணியில் இருந்த காலங்களில் சிவகாமி ஐஏஸ் அவர்களின் நற்குணங்களால் ஈர்க்கப்பட்டேன். அவரோடு சேர்ந்து நிறைய சமூக சேவைகளில் ஆர்வமுடன் கலந்தும் கொண்டேன்.
குறும்படம் தயாரிக்கும் எண்ணம் ஏற்பட்டது எப்படி?
என் சகப் பெண்களின் பல்வேறு அனுபவங்களை உணர்ந்தவள் என்கிற முறையில் எனக்கு சமூக அக்கறையுடனான குறும்படங்களை தயாரிக்கும் எண்ணங்கள் ஏற்பட்டது. அதுவும் நாளிதழ்களை திறந்தால் தினந்தோறும் பெண்கள் குழந்தைகள் என இருவருக்கும் பாலியல் வன்கொடுமைகள் பாலியல் சீண்டல்கள் என நடைபெறுவதை கண்டு சீறி எழுந்து அடங்கி விடுகிறோம். அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற எண்ணங்களே எனது ‘‘இவள் வேற மாதிரி”குறும்படத்தை தயாரிக்க காரணமாக அமைந்தது. திரு.P.சிவகாமி ஐஏஎஸ் அவர்கள் தலைமையிலும், திரு தாம்சன் டைரக்டர் முன்னிலையிலும் வெற்றிகரமாக நட்புகளின் நல்வாழ்த்துக்களுடனும் screening செய்யப்பட்டது. எனது குறும்படத்தை பார்த்த பலரும் பாராட்டி மகிழ்சியை தெரிவித்தனர். பார்வையாளரிடையே நல்லதொரு வரவேற்பினை பெற்று வருகிறது. அதனை விருதுக்கு அனுப்பும் எண்ணமும் இருக்கிறது. எனது படத்தை இயக்க இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிக நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் எனக்கு பெரும் ஒத்துழைப்பினை வழங்கினார்கள். அனைவரது கூட்டு முயற்சியாலே இந்த குறும்படம் உருவாகியது என்றால் மிகையில்லை. இதனையும் எனது சொந்த பணத்தினை கொண்டே சமூக நோக்கத்துடன் உருவாக்கினேன். இதை பார்த்து யாரோ ஒருவர் மனந்திருந்தினாலும் மகிழ்ச்சி தான். இன்று பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்கள் இருப்பதை தான் படத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன். வறுமை மற்றும் சூழ்நிலை காரணமாக வேலைக்கு வரும் எளிய பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து பேசுகிறது இந்த குறும்படம். இன்றைய சூழலில் இத்தகைய குறும்படங்கள் நிறைய தேவைப்படுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. பெண்கள் குழந்தைகளுக்கெதிரான வன்முறைகளை தடுத்து பெண்களை பாதுகாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் தான். அதைத் தான் இதில் தெரிவித்திருந்தோம்.
தன் மேல் அதிகாரி ஒருவரால் கணவனை இழந்த ஒரு பெண் எப்படி பல துன்பங்களுக்கு ஆளாகி, அவள் எப்படி தன் அறிவாலும் தைரியத்தாலும் புத்திக் கூர்மையினாலும் தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டு தன் பிள்ளைகளை படிக்க வைக்க பாடுபடுகிறாள் என்பது தான் “இவள் வேற மாதிரி” குறும்படம். விரைவில் அனைவரது பார்வைக்கும் பொதுத்தள மீடியாக்களில் “இவள் வேற மாதிரி” திரையிடப்படும்
உங்களது இதர பணிகள்?
நான் உளவியல் படித்திருக்கிறேன். அதனால் ஏழை மாணவர்களுக்கு மற்றும் மாணவியருக்கு கல்விக்கான இலவச உளவியல் ஆலோசனைகளை கொடுத்து வந்தேன். பள்ளிகளில் உளவியல் கருத்தரங்கள், மற்றும் உளவியல் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. உளவியல் ஆலோசகரான நான் MENTAL AWARENESS வகுப்பின் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் எடுக்க அழைத்ததின் காரணத்திற்காக அந்த மாணவ , மாணவியர்களுக்கு தேவையான உளவியல் ஆலோசனைகள் வழங்கியும் வருகிறேன்.
எழுதுவதிலும் ஆர்வம் உண்டு அதற்காக இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளேன். எனது வாழ்க்கை வரலாற்றினை ‘‘என் பெயர் மணிமேகலை” என்கிற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். இவரின் இரண்டாம் புத்தக வெளியீட்டு விழா ‘‘பேசலாம் வாங்க” மகத்தான பெண் தலைவர் சமூகப் போராளி திருமதி சிவகாமி ஐ ஏ எஸ் அவர்களால் வெளியிடப்பட்டது.
சமூக சேவைப் பணிகளில் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன். அதே போன்று அரசு பள்ளிகளுக்கும் தேவையான உதவிகளை செய்கிறேன்.
இதுவரை ஆறு அரசு மருத்துவமனைகளை தத்தெடுத்து எங்களது சேவை பணிகளை செய்து வருகிறோம். துப்புரவு பணியாளர்கள் ஏழை எளிய மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்துவருகிறேன். தலித் மக்கள் நலன் ஏழை எளிய மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை எனது சொந்தச் செலவில் செய்து வருகிறேன். இதற்கான பண உதவிகளை யாரிடமும் பெறுவதில்லை. எங்களது குடும்ப வருமானத்தினை தான் உதவிகளாக செய்கிறேன். மகளிர் தினத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளேன் . அது அவர்களுக்கான சிறு அங்கீகாரம் தான். அதனை நாங்கள் முன்னெடுத்து செய்தது மகிழ்ச்சியான ஒன்றுதான்.
வெயில்காலங்களில் மோர் வழங்குவதும் எங்களது சமூக பணிகளில் முக்கியமான ஒன்று. பெண்களுக்கு குடும்ப பிரச்சினை குறித்தான உளவியல் ஆலோசனைகளையும் இலவசமாக அளித்து வருகிறேன். இன்னும் ஏராளமான சமூக சேவை திட்டங்களை தீட்டி வைத்திருக்கிறோம். அதனை ஒவ்வொன்றாக செயல்படுத்தும் எண்ணங்களும் கனவுகளும் இருக்கிறது.
ஏழை எளிய மக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், தெரு கூட்டுபவர்கள், ஏழை எளிய மாணவர்கள் மாணவியர், ஆதரவற்ற பெண்கள், அரசு மருத்துவமனை நோயாளிகள் என பலருக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறேன். எனது சேவைகளை ‘‘அட்சயா பவுண்டேசன்” என்கிற அமைப்பின் மூலம் செய்து வருகிறேன் என்கிறார் இந்த சமூக சேவகி.
எனது சேவை பணிகளுக்காக பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பதும் மகிழ்ச்சியான விஷயம். கலாம் நம்பிக்கை விருது, பொன் மகள் விருது உட்பட பல நூறு விருதுகள் கிடைத்தது உழைப்பிற்கான சிறு அங்கீகாரம் என தன்னடக்கத்துடன் பேசுகிறார் சமூக சேவகி மணிமேகலை.
- தனுஜா ஜெயராமன்
