Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சொந்த உழைப்பில் முன்னேறிய இந்தியாவின் பணக்காரப் பெண் இவர்தான்!

இந்தியர்கள் உலக அளவில் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள். குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப உலகில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பலர் உச்ச பதவிகளில் இருக்கின்றனர். அந்தப் பட்டியலில் தனித்துவமாகத் திகழும் ஒரு பெயர் ஜெயஸ்ரீ உல்லால். ஒரு தொழில்முறைத் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து, உலகின் செல்வாக்கு மிக்க பெண்களில் ஒருவராகவும், ஃபோர்ப்ஸ் பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம் பிடித்தவராகவும் உயர்ந்திருக்கிறார்.

அமெரிக்காவின் சுயமாக முன்னேறிய பணக்காரப் பெண்களின் 11வது ஆண்டு தரவரிசைப் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வம்சாவளி ஜெயஸ்ரீ உல்லால் 7ம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

2026 ம் ஆண்டுக்கான போர்ப்ஸ் பத்திரிகையின் சுயமாக முன்னேறிய பணக்காரப் பெண்கள்’ பட்டியலில் ஏழாவது இடத்தையும், இந்திய வம்சாவளி பெண்களில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். போர்ப்ஸ் அவரது நிகர சொத்து மதிப்பு 6.8 பில்லியன் டாலர் ( சுமார் ரூ.64,000 கோடி) என மதிப்பிட்டுள்ளது. இது அவரை மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக நிலை நிறுத்துகிறது.

1961ஆம் ஆண்டு லண்டனில் இந்தியக் குடும்பத்தில் பிறந்த ஜெயஸ்ரீ உல்லால், சிறுவயதில் இந்தியாவில் வளர்ந்தார். பின்னர் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்ற அவர், மின் பொறியியல் மற்றும் பொறியியல் மேலாண்மையில் பட்டம் பெற்றார். தொழில்நுட்ப உலகில் பெண்கள் மிகக் குறைவாக இருந்த காலகட்டத்தில், தனது திறமையையும் கடின உழைப்பையும் மட்டுமே நம்பி அவர் தனது பயணத்தைத் தொடங்கினார்.

தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் பல தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றிய ஜெயஸ்ரீ, பின்னர் உலகின் முன்னணி நெட்வொர்க் நிறுவனமான சிஸ்கோவில் இணைந்தார். அங்கு பல முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், இணைய மற்றும் தரவு மையத் தொழில்நுட்ப வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். அவரது தொழில்நுட்ப அறிவும் நிர்வாகத் திறனும் அவரை மிக விரைவாக உயர்ந்த பதவிகளுக்குக் கொண்டு சென்றன.

2008ஆம் ஆண்டு, அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அவர் பொறுப்பேற்றார். அப்போது வளர்ச்சி நிலையிலிருந்த அந்த நிறுவனம், அவரது தலைமையில் உலகின் முன்னணி கிளவுட் நெட்வொர்க் நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது. இன்று செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் உலகின் மிகப்பெரிய தரவு மையங்களுக்குத் தேவையான அதிவேக நெட்வொர்க் தொழில்நுட்பங்களை வழங்கும் முக்கிய நிறுவனமாக அரிஸ்டா திகழ்கிறது.

ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி உலக அளவில் புகழ் பெறுவது பெரிய சாதனை என்றால், அந்த வெற்றியின் மூலம் உலகின் பணக்காரப் பெண்களில் ஒருவராக உயர்ந்திருப்பது இன்னும் பெரிய சாதனைதான்.

இங்கு கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் ஜெயஸ்ரீ உல்லால் ஒரு தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கியவரும் அல்ல. ஒரு சாதாரண தொழில்முறை ஊழியராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, தனது திறமை, தலைமைத்துவம் மற்றும் சரியான முடிவுகள் மூலம் பல பில்லியன் டாலர் சொத்துகளை உருவாக்கியுள்ளார்.

தொழில்நுட்ப உலகில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும் என்பதில் ஜெயஸ்ரீ உல்லால் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். பெண்கள் அறிவியல், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் தயக்கமின்றி முன்னேற வேண்டும் என்றும், தொடர்ந்து கற்றுக்கொள்வதும் புதிய சவால்களை ஏற்றுக்கொள்வதும்தான் வெற்றியின் ரகசியம் என்றும் பல்வேறு மேடைகளில் வலியுறுத்தி வருகிறார்.

உலகின் சக்திவாய்ந்த பெண் தலைவர்களின் பட்டியலிலும், செல்வாக்கு மிக்க தொழில்நுட்ப நிர்வாகிகளின் பட்டியலிலும் தொடர்ந்து இடம்பெற்றுவரும் ஜெயஸ்ரீ உல்லால், இந்திய வம்சாவளியின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியுள்ளார். செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் தொழில்நுட்பம் எதிர்கால உலகின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும் இந்தக் காலகட்டத்தில், அந்த மாற்றத்தின் மையத்தில் இருந்து ஒரு இந்தியப் பெண் உலகத் தொழில்நுட்பத்தை வழிநடத்தி வருவது சிறப்பான ஒன்று.

“பெண்கள் சாதிக்கமுடியாத துறை எதுவுமில்லை” என்று நாம் அடிக்கடி சொல்வோம். அந்த வார்த்தைகளை தனது வாழ்க்கையால் நிரூபித்துக் காட்டி யவர்களில் ஜெயஸ்ரீ உல்லாலும் ஒருவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றை வழிநடத்தி, ஃபோர்ப்ஸ் பணக்காரப் பெண்கள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் அவரது பயணம், இந்திய இளம் பெண்களுக்கு மட்டுமல்ல, கனவு காணும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஊக்கமளிக்கும்.

- ஆ.கவின்.