Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தகர்ந்த நம்பிக்கை

கேன்சர் என்னும் புற்றுநோய் என்ற பெயரை கேட்டவுடன், ஒவ்வொருவர் மனதிலும் ஒரு இனம்புரியாத அதிர்வு வந்துபோகும். இயந்திரமயமான இன்றைய வாழ்க்கை சூழலில் ரத்தப்புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வாய்வழி புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்று பல்வேறு நிலைகளில் இதன் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை புற்றுநோய் என்பது சமீப ஆண்டுகளில், ஒரு மிகப்ெபரும் சவாலாக மாறியுள்ளது.

ஆண்டுதோறும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்படும் நபர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, 2022ம் ஆண்டில் புற்றுநோய் பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.61 லட்சமாக இருந்தது. இது கடந்தாண்டு (2025) நிலவரப்படி 15.7 லட்சமாக உயர்ந்துள்ளது என்பதே இதற்கான சான்று. இதேபோல் இந்தியாவில் ஒன்பது பேரில் ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

இந்த வகையில் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு புற்றுநோய் பாதிப்புகளுக்கு ‘கீமோதெரபி’ என்னும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையின்போது, பொதுவாக கார்போபிளாட்டின், சிஸ்பிளாட்டின் என்ற 2 மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்துகளை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் உயர்ந்துள்ளது. அதற்கு ஏற்ப, வெளிநாட்டு நிறுவனங்கள் மருந்து விலையை உயர்த்தியுள்ளன. இந்தியாவை பொறுத்தவரை இந்த மருந்துகள், ஒன்றிய அரசின் அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் உள்ளது.

இதனால் மருந்துகளின் விலையை ஒன்றிய அரசு, கட்டுப்படுத்தி வந்தது. தற்போதைய சூழலில் கட்டுப்பாடான விலைக்கு இந்த மருந்துகளை விற்றால் நஷ்டம் ஏற்படும் என்று மருந்து நிறுவனங்கள் தெரிவித்தன. அதோடு பல நிறுவனங்கள் கார்போபிளாட்டின், சிஸ்பிளாட்டின் மருந்து உற்பத்தியை நிறுத்தின. இந்தநிலையில் புற்றுநோய் மருந்துகளின் உற்பத்தி செலவு, மூலப்பொருட்கள் விலை போன்றவற்றை ஆய்வு செய்து, அதன்அடிப்படையில் விலை நிர்ணயிக்க தேசிய மருந்து ஆணையத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதையடுத்து மருந்து நிறுவனங்கள் வழங்கிய மூலப்பொருள் தரவுகளின் அடிப்படையில் முந்தைய விலையில் இருந்து 10 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை, மருந்து விலையை உயர்த்த தேசிய மருந்து ஆணையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கார்போபிளாட்டின், சிஸ்பிளாட்டின் மருந்துகளின் விலை பெருமளவில் உயரும் நிலை உருவாகியுள்ளது. அதோடு மேலும் விலையேற்றத்திற்கு அனுமதி கேட்டிருக்கும் 78 மருந்துகளின் விவரங்களையும் தற்போது ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புற்றுநோயை பொறுத்தவரை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். செல்வந்தர், ஏழை என்று எந்த பாகுபாடும் இல்லாமல் தான் இதன் பாதிப்புகள் உருவாகிறது. இந்தச்சூழலில் புற்றுநோயில் இருந்து உயிர்காக்கும் மருந்துகள் விலை கட்டுப்படியாக இருந்தது.

இதனால் அதனை எதிர்கொண்டு சிகிச்சை பெறலாம் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆனால் தட்டுப்பாட்டை போக்க கட்டுப்படியான விலைக்கு அங்கீகாரம் என்ற ஒன்றிய அரசின் முடிவு, இந்த நம்பிக்கையை தகர்த்துள்ளது என்பதே நிதர்சனம். எனவே இதற்கான தீர்வை ஒன்றிய அரசு தர வேண்டியது இன்றைய அவசியம்.