Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

விளாத்திகுளத்தில் பயங்கரம்; அரசுப்பள்ளி வகுப்பறையில் மாணவனை நிர்வாணமாக்கி சித்ரவதை, பாலி*ல் தொல்லை: பிறப்புறுப்பில் தாக்கி மிளகாய் பொடிதூவி கொடூரம்

8ம் வகுப்பு மாணவர்கள் 9 பேர் கைது

தூத்துக்குடி: விளாத்திகுளம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு மாணவருக்கு ஓராண்டுக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தல் அளித்த சக மாணவர்கள் 9 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவரின் தாய், தனது மகனுக்கு சக மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுப்பதாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், இந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் எனது மகனை இதே வகுப்பில் பயிலும் 9 மாணவர்கள் அவ்வப்போது ராகிங் செய்து வந்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கும் மேலாக அவர்கள், எனது மகனை பாலியல் ரீதியாக பல்வேறு விதமாக துன்புறுத்தி உள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர் பெரும்பாலும் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, எனது மகனிடம் விசாரித்தபோது, சக மாணவர்களால் ஓராண்டாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து எனது மகனை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து உள்ளோம். பாலியல் துன்புறுத்தல் கொடுத்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ‘‘பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாணவர்கள், சம்பந்தப்பட்ட மாணவரை வகுப்பறைக்குள் நிர்வாணமாக்கி நிற்க வைத்து ரப்பர்பேண்ட், ஸ்கேல் உள்ளிட்டவற்றால் அவரது பிறப்புறுப்பில் கொடூரமாக அடித்துள்ளனர். மிளகாய் பொடி தூவியும், பப்பிள்கம் ஒட்டியும், காலால் மிதித்தும் சித்ரவதை செய்துள்ளனர்’’ என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து பாலியல் துன்புறுத்தல் செய்த 9 மாணவர்களை கைது செய்து தூத்துக்குடி சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர்படுத்தி பாளை. இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள், இதுபோன்று வேறு மாணவர்களுக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளனரா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

போலீசுக்கு பள்ளியில் இருந்து தகவல் தெரிவிக்காதது ஏன்?

வகுப்பறைக்குள் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து தெரியவந்ததும் தலைமை ஆசிரியை உள்ளிட்டோர் ஏன் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுந்துள்ளது. இவ்விவகாரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி கூறுகையில், ‘‘நேற்று முன்தினம் இரவுதான் இதுகுறித்த தகவல் எங்களுக்கு தெரியவந்தது. இந்த சம்பவமே கிராப்ட் வகுப்பின் போதுதான் ஆசிரியர்களுக்கு தெரிய வந்துள்ளது.

அவர்கள் தான் மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியையிடம் விளக்கம் மற்றும் விரிவான விசாரணை அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. அந்த அறிக்கை வந்த பின்னர் துறை ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.