Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 பேருக்கு வலை

மதுரை: குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக பெண் வார்டன், குழந்தைகள் பாதுகாப்பு நலவாரிய உறுப்பினர் மீது போலீசார் வழக்குப்பதிந்து அவர்களை தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், பேரையூர் அருகே, டி.கல்லுப்பட்டி பகுதியில் ‘குழந்தைகள் பாதுகாப்பு இல்லம்’ என்னும் தனியார் இல்லம் செயல்பட்டு வந்தது. இங்கு 16 பெண் குழந்தைகள் தங்கி படித்து வந்தனர். இங்கு வார்டனாக மெர்சி அன்னபூரணி (42) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த இல்லத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நலவாரியம் அமைக்கப்பட்டு, அதில் உறுப்பினராக விருதுநகரைச் சேர்ந்த ராஜா சக்திவேல் (44) உள்ளார்.

இவர், அடிக்கடி குழந்தைகள் இல்லத்திற்கு வந்து தங்குவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இல்லத்தில் தங்கி அருகில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமியை, ஒரு நாள் தனது அறைக்கு தண்ணீர் கொண்டு வரச்சொன்ன ராஜாசக்திவேல், அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதை யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டல் விடுத்துள்ளார். அதன்பின் பலமுறை இல்லத்திற்கு சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் மதுரை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் தர்மசீலனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதன்பேரில் குழந்தைகள் இல்லத்தில் விசாரணை நடத்திய அவர், இது குறித்து பேரையூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன்பேரில், ராஜாசக்திவேல், அன்னபூரணி ஆகியோர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதையறிந்த பெண் வார்டனும் ராஜாசக்திவேலும் தலைமறைவாகிவிட்டனர். இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், குழந்தைகள் இல்லத்திற்கு நேற்று சீல் வைத்து, பெண் குழந்தைகள் அனைவரும் வேறு இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தவெக ஆட்சிக்கு வந்த பின்னர் பெண் குழந்தைகள், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்வதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.