விவசாயிகள் தற்கொலையை தடுக்க நடவடிக்கை; கந்துவட்டி வசூலித்தால் 7 ஆண்டு சிறை: மகாராஷ்டிராவில் புதிய மசோதா தாக்கல்
மும்பை: விவசாயிகளை கந்துவட்டி கொடுமையிலிருந்து பாதுகாக்கவும், சட்டவிரோத கடன் வழங்குநர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் மகாராஷ்டிரா அரசு புதிய மசோதாவை தாக்கல் செய்துள்ளது. மகாராஷ்டிராவில் சட்டவிரோத கந்துவட்டி தொழிலை கட்டுப்படுத்தவும், கடன் வசூலின் போது விவசாயிகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கவும், ஏற்கனவே அமலில் உள்ள 2014ம் ஆண்டின் பணமதிப்பு கடன் வழங்குநர்கள் ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான புதிய மசோதா சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மூலம், முறையான உரிமம் இன்றி சட்டவிரோதமாக கடன் வழங்குவோருக்கு வழங்கப்படும் தண்டனை 5 ஆண்டுகள் சிறையிலிருந்து 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக உயர்த்தவும், அபராதத் தொகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக இரட்டிப்பாக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
கடன் வசூலின் போது கடன் வாங்கியவர்களை துன்புறுத்துவது அல்லது துன்புறுத்த தூண்டுவது போன்ற செயல்களுக்கு அதிகபட்ச தண்டனை 2 ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாகவும், அபராதம் 5,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்கவும் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோத கடன் கொடுமையால் விவசாயிகள் கடன் சுமையில் சிக்கி தற்கொலை செய்து கொள்வதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
