Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னை மண்ணடி பகுதியில் போதைபொருள் பதுக்கி விற்ற 7 பேர் கைது: போதை ஸ்டாம்ப், 2 பைக் பறிமுதல்

தண்டையார்பேட்டை: சென்னை பாரிமுனை, மண்ணடி பகுதிகளில் கடந்த சில நாட்களாக போதைபொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று மாலை பூக்கடை துணை ஆணையருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், வடக்கு கடற்கரை காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் மண்ணடி, தம்பு செட்டி தெரு உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது தம்பு செட்டி தெரு பகுதியில் பைக்கை நிறுத்தி வைத்து, சந்தேக நிலையில் நின்றிருந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

இதனால் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில், விற்பனை செய்வதற்காக போதைபொருள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வாலிபர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மண்ணடி பகுதியை சேர்ந்த முகமது ஜுபைர் ஒலி (36), முகமது இர்ஃபான் (30), ஜுனைத் மீரா சாகிப் (29), ஷாம் செகாபுதீன் (21), முகமது சுலைமான் (24), அபுபக்கர் சித்திக், யாசர் அராபத் ஆகிய 7 பேர் எனத் தெரியவந்தது. இவர்கள் ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்வேறு போதை பொருட்களை கடத்தி வந்து, பதுக்கி வைத்து சில்லறை விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து வடக்கு கடற்கரை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, போதைபொருளை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட முகமது ஜுபைர் ஒலி உள்பட 7 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மெத்தப்பெட்டமைன், 14 போதை ஸ்டாம்ப், போதை மாத்திரை, ஊசி மற்றும் 2 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களை ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தப்பியோடி தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.