Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அவசரகால ஊர்திகளின் சேவைகளை மேம்படுத்த 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகள் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 18 கோடியே 90 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ‘108’ அவசரகால ஊர்தி சேவை 2008ம் ஆண்டு செப்டம்பர் 15ம் நாள் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இஎம்ஆர்ஐ ஜிஎச்எஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ஏற்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையை வழங்கி வருகிறது.

இச்சேவை 24*7 மணி நேரம் என்ற சேவையின் அடிப்படையில், பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.  பொதுமக்கள் அவசரகால மருத்துவ தேவைக்கு 108 என்ற கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறுகின்றனர். அவசரகால நெருக்கடியின் போது தேவையான மருத்துவ உதவியை எளிதாகவும், உடனடியாகவும் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் வழங்க, தற்போது 1,353 எண்ணிக்கையிலான ‘108’ அவசரகால ஊர்திகள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில், 977 அடிப்படை வசதி கொண்ட அவசரகால ஊர்திகள், 307 மேம்படுத்தப்பட்ட அவசரகால ஊர்திகள், 65 பச்சிளங்குழந்தைகளுக்கான ஊர்திகள் உள்ளிட்ட ஊர்திகள் அடங்கும். திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து இதுவரை ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவை மூலம் கருவுற்ற தாய்மார்கள், சாலை விபத்துகளில் காயமுற்றோர், இதர அவசரகால மருத்துவ தேவைகள் என மொத்தம் 85,98,054 மருத்துவ பயனாளிகள் பயன்பெற்று உள்ளனர்.

இவை தவிர, 41 இரு சக்கர வாகன அவசரகால ஊர்திகள் மூலம் 1,61,688 மருத்துவ பயனாளிகளும், பச்சிளங்குழந்தைகளுக்கான சேவை மூலம் 95,119 மருத்துவ பயனாளிகளும், பழங்குடியினர் பகுதிகளில் வசிக்கும் 4,30,697 மருத்துவ பயனாளிகளும் பயன்பெற்றுள்ளார்கள். ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையை மேலும் செம்மையாக செயல்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் 18 கோடியே 90 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 87 புதிய ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவையை நேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து சென்னை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் திட்ட இயக்குநர் வினீத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.