Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புதிய மசோதாவிற்கு செனட் சபை ஒப்புதல்; இந்தியா மீது 100% வரி விதிக்க வாய்ப்பு?: டிரம்புக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுவதால் பரபரப்பு

வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் புதிய மசோதாவிற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ரஷ்யா மற்றும் ஈரான் மீதான பொருளாதார தடைகளை தீவிரப்படுத்தும் வகையில் ‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ என்ற புதிய மசோதா மீது அமெரிக்க செனட் சபையில் வாக்களிப்பு தொடங்கியது. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், புதிய மசோதா நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

இந்த மசோதா சட்டமானால், ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரிகளை விதிக்க அதிபர் டிரம்பிற்கு முழு அதிகாரம் கிடைக்கும். மேலும், இந்த வரிகளை நீக்குவது அல்லது தளர்த்துவது தொடர்பான முடிவுகளையும் டிரம்பின் விருப்பத்திற்கே விட்டுவிட மசோதா வழிவகை செய்கிறது. ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி கிடைப்பதைத் தடுப்பதுடன், ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் தீவிரவாத ஆதரவு நடவடிக்கைகளை முடக்குவதையும் இந்த மசோதா நோக்கமாக்கியுள்ளது. எனினும், அதிபர் டிரம்பிற்கு வரி விதிக்கும் அளவுக்கு அதிகாரம் வழங்குவது அமெரிக்கக் குடும்பங்களின் இறக்குமதி செலவை உயர்த்தும் என ஜனநாயகக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரங்கள் குழுவின் முன்னணி ஜனநாயகக் கட்சி உறுப்பினர் கிரிகோரி மீக்ஸ் பேசுகையில், ‘இது வெறும் தடைகளுக்கான மசோதா அல்ல, ஐரோப்பிய நட்பு நாடுகள் உட்பட பிற நாடுகள் மீது டிரம்ப் கூடுதல் வரிகளை விதிக்க வழிவகுக்கும் மறைமுக அதிகாரம் ஆகும்’ என்று விமர்சித்துள்ளார். ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் முதல் 5 நாடுகள் மீது இந்த வரிவிதிப்பு முதன்மையாகக் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.