புதுடெல்லி: இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி கட்டமைப்பை விரிவுபடுத்தும் வகையில் ரூ.1,27,500 கோடி மதிப்பிலான செமிகான் 2.0 திட்டத்தை ஒன்றிய அரசு அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தது. இத்திட்டத்திற்கு கடந்த ஜூலை 15ல் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து, இத்திட்டத்தின் செயல்முறை, நிதி ஒதுக்கீட்டை செயல்படுத்தும் விதம், சலுகைகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இத்திட்டம், சிப் வடிவமைப்பு, இயந்திரங்கள் மற்றும் பொருட்கள், புதிய ஆலைகள் நிறுவுதல், பேக்கிங் துறை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகிய பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது.
இத்திட்டத்தின் கீழ் சிலிக்கான் ஆலைகளுக்கு 40% நிதியுதவியும், காம்பவுண்ட் மற்றும் டிஸ்ப்ளே ஆலைகளுக்கு 35% நிதியுதவியும் வழங்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக, இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 6 மாநிலங்களில் 12 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதில் மைக்ரானின் ஏடிஎம்பி ஆலை, கெய்ன்ஸ் செமிகான் மற்றும் சிஜி செமி ஆகியவற்றின் ஓஎஸ்ஏடி ஆலைகள் என 3 ஆலைகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வணிக ரீதியான உற்பத்தியைத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.



