Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெண்களுக்கு தற்காப்பு கலைகள் அவசியம் - ஜூடோ கலையில் சாதித்து வரும் அப்ஸா நூஹா!

ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு சாதிக்க வேண்டும் என்பதே தனது பெரும் கனவு மற்றும் ஆசை என்கிறார் மண்ணடி பகுதியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி அப்ஸா நூஹா. தந்தை இம்ரான் மொய்தீன் தனியார் பணியில் இருக்கிறார். அம்மா ஷானாஸ் இம்ரான் சிறப்புக் குழந்தைகளுக்கான ஸ்பெஷல் எஜூக்கேட்டராக இருக்கிறார். சிறு வயது முதலே ஏதேனும் சாதிக்க வேண்டும் என்கிற கனவு களோடு பல்வேறு கலைகளை கற்றுக் கொண்டு அசத்தி வருகிறார் இந்த சாதனை சிறுமி. நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் தங்களது குழந்தைகளை பல்வேறு சிரமங்களுக்கிடையே பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி சாதனை சிறுமியாக மாற்றி யுள்ளனர் இவரது பெற்றோர்கள். அப்ஸா நூஹா கடந்த ஏழு ஆண்டுகளாக ஜூடோ பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு அசத்திவருகிறார். விளையாட்டில் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற விருப்பத்தோடு இருக்கும் சாதனை சிறுமி அப்ஸா நூஹாவின் ஜூடோ விளையாட்டு மற்றும் வெற்றிகள் குறித்து அவரது பெற்றோர் பகிர்ந்து கொண்டதிலிருந்து..

விளையாட்டு ஆர்வம் ஏற்பட்டது குறித்து?

அப்ஸா நூஹாவினை ஐந்து வயது முதலே பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி வருகிறோம். எனது மூத்த மகனும் விளையாட்டு துறையை ஆர்வமுடன் கையில் எடுத்திருக்கிறார். அவனும் ஜூடோவில் நிறைய பதக்கங்களை வென்று சாதித்தவன். அவனது பயிற்சி வகுப்புகளுக்குக் கூட சென்ற எங்களது மகளுக்கும் ஜூடோ விளையாட்டு குறித்து ஆர்வம் ஏற்பட்டது. அவளது ஆர்வத்தினை கண்டு ஐந்து வயது முதல் பயிற்சிக்கு அனுப்பினேன். தற்போது பதக்கங்கள் பெறும் அளவிற்கு நல்ல அளவில் சாதித்து வருகிறாள். ஜூடோவில் அவளது குரு ரைனோ கிளப் முகமது வசீம் , ஷாகீர் அலி ஆகியோரிடம் ஜூடோ கலையை கற்றுவருகிறாள்.

ஏழு வருடங்களாக கற்று வரும் அவள் தற்போது மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்று சாதித்து வருகிறாள். கடந்த 2024ல் தங்கப்பதக்கம் வென்றாள். அடுத்த வருடம் 2025 ஆம் ஆண்டில் வெள்ளி பதக்கங்கள் வென்று சாதித்தாள். தற்போது 2026 ஆம் ஆண்டிற்கான போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வமுடன் கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறாள். இந்த ஏழு வருடங்களில் நிறைய போட்டிகளில் விளையாடி பரிசுகளையும் பதக்கங்களையும் வென்று வருவது எங்களுக்கு பெருமையான விஷயம். இத்துறையில் நிறைய சாதிக்க வேண்டும் என்கிற பெரும் கனவு அவளுக்கும் எங்களுக்கும் இருக்கிறது.

பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலைகள் எந்த அளவுக்கு அவசியம்?

தற்போது நிலவி வரும் சில கடுமையான சூழலில் ஒவ்வொரு குழந்தைக்குமே தற்காப்பு கலைகள் ஏதேனும் கற்றுக்கொள்வது அத்தியாவசியமானது தான். இன்றைய நிலையில் குழந்தைகள் தங்களை தாங்களே தற்காத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகி விட்டது. ஏதேனும் ஒரு தற்காப்பு கலையைக் கற்றுக்கொண்டால் எச்சூழலையும் எளிதாய் சமாளித்துவிடலாம். என் பெண்ணை பொறுத்தவரை எனது ஆண்குழந்தைகளுக்கு சமமாகதான் வளர்த்து வருகிறேன். எனது ஆண்பிள்ளை என்ன கலைகளை கற்றுக்கொள்கிறானோ அது என் பெண்குழந்தைக்கும் கிடைக்கும் படி பார்த்துக் கொள்கிறேன். என் குழந்தைகளிடையே ஆண் பெண் என்கிற பாகுபாட்டை நான் விரும்பவில்லை. எனவே தான் அவள் ஜூடோ கற்றுக் கொள்ள விரும்பிய போது முறையாக பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி கற்றுக் கொள்ள வழிவகை செய்தோம். இன்று அவள் இத்துறையில் சாதித்து வருவது எங்களுக்கு மகிழ்வான ஒன்று.

இதர திறமைகள் குறித்து...

அவளது ஐந்து வயதில் செய்த சில பயிற்சிகளினால் அவள் இன்று பல திறன்களை பெற்று சாதித்து வருகிறாள். இதன் காரணமாக இவரது நினைவாற்றல் மற்றும் கற்றல் திறன் அதிகரித்திருக்கிறது. கவனச்சிதறல்கள் ஏதுமின்றி பல துறைகளிலும் சாதிக்க உதவுகிறது. இதுவரை தனிநபர் உலக சாதனையாக மூன்று முறை சாதித்துள்ளார், குழு உலக சாதனையாக மூன்று முறை அசத்தியிருக்கிறார். கையெழுத்து போட்டிகளிலும் சாதித்துள்ளார். ரூபிக் க்யூபிக்கில் தனியாகவும், குழுவாக இணைந்தும் பல்வேறு சாதனைகளை செய்திருக்கிறார். அதில் அப்துல் கலாம் உருவத்தை கண்ணைக் கட்டிக் கொண்டு குறிப்பிட்ட நேரத்தில் அமைத்து சாதனை படைத்துள்ளார்.

இவரது விளையாட்டு சாதனைகளுக்காக பல்வேறு பரிசுகளையும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை பெற்றுள்ளார். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்கள் கிடைத்துள்ளது. மேலும் கல்வி அமைச்சரிடமிருந்தும் சான்றிதழ் மற்றும் மெடல்களையும் பெற்றிருக்கிறார். சாதனை குழந்தைகள் என்கிற பெருமிதத்தோடு கவர்னர் மாளிகையில் விருது பெற்றதும் இவர்களின் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றதை மகிழ்வாய் சொல்கிறார்கள். மண்ணடி பகுதியில் உள்ள அவர்லேடி பள்ளியில் ஏழாவது படிக்கும் அப்ஸா நூஹாவின் சாதனைகளுக்கும் பல்துறை திறன்களுக்கும் அப்பள்ளியும், அதன் ஆசிரியப் பெருமக்களும் பெரும் ஒத்துழைப்பு தருகிறார்கள். மேலும் இவரது பயிற்சியாளர்கள் அகிலாண்டேஸ்வரி, குரு முகமது வசீம், ஷாகீர் அலி மற்றும் அப்ஸா நூஹாவின் பெற்றோர்கள் ஆகியோரின் ஊக்கத்தினாலும் உதவியினாலும் எதிர்வரும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு நிறைய பதக்கங்களை பெற வேண்டும் என்பதே இந்த சாதனை சிறுமியின் கனவாக இருக்கிறது. எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு தாய்நாட்டிற்கு பதக்கங்களை பெற்று தரவேண்டும் என்பதே தனது பெருங்கனவென்கிறாள் இந்த சாதனை சிறுமி. கல்வியிலும் சிறந்து விளங்கி வருகிறார். இவரது கனவுகள் நனைவாக வாழ்த்தி விடை பெற்றோம்.

- தனுஜா ஜெயராமன்.