நெல்லை: அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்த நான்கு தொகுதிகள் ஆகியவை காலியாக உள்ளது. இந்நிலையில் இந்த 5 தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனும் தகவல்கள் வெளியாகியது.
இதனிடையே திருநெல்வேலி நீதிமன்றத்தில் இன்று (அக்.29) வழக்கு ஒன்றில் ஆஜராகிய பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்; அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் நான் போட்டியிடுகிறேன். நான் எப்படியாவது அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு வெல்வதில் உறுதியாக இருக்கிறேன். எல்லா சாதிக்குமான பொது வேட்பாளர் நான்; உறவுகள் வேறு, அரசியல் நிலைப்பாடுகள் என்பது வேறு; நான் எப்போதுமே பொது வேட்பாளர்.
அடுத்த மாதம் 27ம் தேதியில் இருந்து இடைத்தேர்தலுக்கான பணிகளை நாங்கள் தொடக்க உள்ளோம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; ஆட்சிக்கு எதிராகப் பேசினாலே கைது என்றால் எங்கே பேச்சுரிமை இருக்கிறது? கருத்துரிமை இல்லை. பெண்களுக்கு எதிராக, குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட அவர்களின் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்படாமல் இருக்கிறார்கள் என்றும் விமர்சனம் செய்தார்.


