காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, போலீசாரை கைது செய்தது சரியே: விசாரணையை 9 மாதத்தில் முடிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு
மதுரை: மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கை 9 மாதங்களில் முடிக்க கூறியுள்ள ஐகோர்ட் மதுரை கிளை, டிஎஸ்பி உள்ளிட்டோரை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது. சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ, மதுரை நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்ஐ சிவக்குமார், ஏட்டு இளையராஜா ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து இவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு மதுரை நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் விசாரணைக்கு முறையாக ஆஜராகி வந்தோம். எங்களை கைது செய்யக் கூடாது என உத்தரவு வாங்கியிருந்தோம்.
இந்நிலையில் எங்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு மாறானது. எனவே, எங்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்ட மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி பி.முருகன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
சிபிஐ வழக்கறிஞர் முகைதீன் பாட்சா ஆஜராகி, ‘‘விசாரணை நீதிமன்றம் சரியாகவே உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்காக மாற்றிய பின்னர் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது. எனவே, இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘‘மனுதாரர்களை கைது செய்ய உத்தரவிட்டது சரி தான் என்பதால், இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. அஜித்குமார் கொலை வழக்கின் விசாரணையை 9 மாதத்தில் முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.


