Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சீட் கிடைக்காமல் போனால் செலவிட்ட பல கோடி வீணாகிப் போய்விடுமோனு கட்சி மாறிய மாஜி கவலைப்படுவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘வேட்பாளர் அறிவிக்கும் முன்பே தேர்தல் பணி தொடங்கியவருக்கு இலைக்கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் வால்பாறை சட்டமன்ற தொகுதி மட்டும் ரிசர்வ் தொகுதி. இத்தொகுதி இலைக்கட்சி எம்எல்ஏ கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். அதன்பிறகு, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் இத்தொகுதிக்கு இலைக்கட்சி, மலராதக் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறதாம்.. ஆனாலும், இலைக்கட்சியே போட்டியிடும் என்ற நிலை உள்ளது. வேட்பாளர் யார்? என கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முன்பாகவே, கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த ஒரு தனியார் பள்ளி உரிமையாளர் தொகுதிக்குள் களம் இறங்கி, யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும், என்னென்ன தேர்தல் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்கிற ஆரம்பக்கட்ட பணிகளை துவக்கி விட்டாராம்.. இவரது செயல்பாட்டுக்கு உள்ளூர் இலைக்கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனராம்.. ‘ஒவ்வொரு முறையும் வெளியே இருந்து ஆட்களை கொண்டுவந்து, இவர்தான் வேட்பாளர் என்கிறார்கள்... இனியும் இதை பொறுத்துக்கொள்ள முடியாது. இம்முறை உள்ளூர்காரர் ஒருவரையே வேட்பாளராக அறிவிக்க வேண்டும்..’ என கொடி தூக்கி உள்ளார்களாம்.. அதனால், இலைக்கட்சியில் ஒரே சலசலப்பு ஏற்பட்டிருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘யூனியனில் கூடுதல் பணிச்சுமை புகார் பறந்ததால் தடாலடி காட்டிட்டாராமே பவர்புல் நிர்வாகி..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ஆன்மிகத்துக்கு பெயர்போன தென் யூனியனில் அரசு அதிகார வர்க்கங்கள் மோசடி புகார்களில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறதாம்.. இதனால் ஐடி, ஈடி அவ்வப்போது விசிட் அடிப்பதோடு சில முக்கிய துறைகளை ரகசிய தூதுவர்களின் கண்காணிப்பிலேயே வைத்துள்ளதாம்.. நிலைமை இப்படியிருக்க மறுபுறமோ அரசு பணியாளர்களை தங்களது விருப்பம்போல் சர்வீஸ் பிளேஸ்மென்ட்டில் சொந்த பணிகளுக்கு ஆட்சியாளர்கள் தாராளமாக பயன்படுத்தி வந்தார்களாம்.. தற்போது அது எல்லை மீறிட, அத்துறையினருக்கு கூடுதல் பணிச்சுமை ஆனதாம்.. தங்களது மேலிடத்திடம் முறையிட்டும் பலனில்லாததால், பவர்புல் நிர்வாகிக்கு புகார் பறந்ததாம்.. இதையடுத்து ரகசிய கணக்கெடுப்பு நடத்திய நிர்வாகியோ, சர்வீஸ் பிளேஸ்மென்ட்டை உடனே ரத்து செய்து தடாலடி காட்டினாராம்.. இதனால் 4 பிராந்தியங்களிலும் உள்ள ஜால்ரா பணியாளர்களும், தேர்தல் நெருங்கிவிட்டதால் தூக்கத்தை தொலைத்து புலம்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சீட் கிடைக்காமல் போனால் செலவிட்ட பல கோடி வீணாகிப் போய்விடுமோனு கட்சி மாறிய மாஜி கவலையில் இருக்காராமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘புரம் என முடியும் கடலோர மாவட்டத்தில் கதர் கட்சியில் எம்எல்ஏவாக இருந்த வெளிநாட்டு பெயரை கொண்டவர், தனக்கு மீண்டும் சீட் கிடைக்காததால் சேலத்துக்காரர் முன்னிலையில் இலைக்கட்சியில் சேர்ந்தார். அப்போதே அவருக்கு தான் குளத்தூர் தொகுதி என உறுதி கொடுக்கப்பட்டதாம்.. இதை நம்பி இலைக்கட்சி தரப்பினரை சரி கட்டும் வேலைக்காக பணத்தை தண்ணீராக செலவிட்டு வந்தாராம்.. குறிப்பாக இங்கு ஏற்கனவே போட்டியிட்ட இலைகட்சி வேட்பாளரின் கணவரான மாவட்ட நிர்வாகி, இலை கட்சி மண்டல பொறுப்பாளரான மாஜி அமைச்சரான உதயமானவர் உள்ளிட்டோருக்கு கொடுத்து சரிகட்டி வைத்திருந்தாராம்.. இதனால் மாவட்ட நிர்வாகி தரப்பும் மரியாதையாக துவங்கும் தொகுதியில் கவனம் செலுத்தி வந்தார். அந்த தொகுதிக்கும் தற்போது சேலத்துக்காரர் தரப்பில் இருந்து லாட்டரி குடும்பத்தைச் சேர்ந்தவர் போட்டியிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், மாவட்ட நிர்வாகி தனது கவனத்தை மீண்டும் குளத்தூர் தொகுதிக்கு திருப்பியுள்ளாராம்.. அதே நேரம் கூட்டணி கட்சியான குக்கர் தரப்பை சேர்ந்த மாஜி ஒருவரும், குளத்தூர் தொகுதி எங்களுக்கு ஒதுக்கப்படும் என கூறிவருகிறாராம்.. இதனால், வெளிநாட்டு பெயரைக் கொண்ட மாஜி பெரும் கலக்கத்தில் உள்ளாராம்.. சீட் கிடைக்காவிட்டால்... இதுவரை செலவிட்ட பல கோடிகள் வீணாகிப் போய் விடுமோ என்ற கவலை அவரை ஆழ்த்தியுள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா..

‘‘இலைக்கட்சி ஆட்சியின்போது வேண்டியவங்களை கொண்டு வர லோக் ஆயுக்தா சட்டத்தை மாத்திப்புட்டதா புகார் போயிருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ஊழலுக்கு எதிராக விஜிலென்ஸ் இருந்தாலும் லோக் ஆயுக்தா என்ற அமைப்பு ரொம்பவே வேகமானதாம்.. கர்நாடகாவில் இந்த அமைப்பில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கியவர்களை கதற கதற கைது பண்ணுவாங்களாம்... இதற்கிடையில் கடந்த 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டிலும் இலைக்கட்சி ஆட்சியின்போது லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டதாம்.. இதன் தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் 4 உறுப்பினர்கள் இருக்க வேண்டுமாம்.. அதே நேரத்தில் துணை செயலராக ஐஏஎஸ் அதிகாரி தான் இருக்க வேண்டுமாம்.. ஆனால் இலைக்கட்சி ஆட்சி காலத்தில் அந்த இடத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியை நியமிக்கும் வகையில் சட்டத்தை மாத்திபுட்டாங்களாம்.. அவர்களுக்கு வேண்டியவர்களை கொண்டு வந்து அந்த இடத்தில் அமரவைக்க வேண்டும் என்பது தான் அவர்களின் திட்டமாக இருந்ததாம்.. எதையும் சட்டத்தை கொண்டு வந்து மாற்ற இடமிருந்தாலும் து.செயலரை மட்டும் மாற்ற முடியாதாம்... ஆனால் இலைக்கட்சி ஆட்சியின்போது தைரியமாக இச்செயலை செஞ்சிட்டாங்களாம்... இந்த விவகாரத்தை கண்டுபிடித்த ஐஏஎஸ் அதிகாரிகள், புள்ளி விவரத்தோடு அரசுக்கு புகாரை அனுப்பியிருப்பதாக சொல்றாங்க.. அதில், இந்த அமைப்பு நன்றாக செயல்பட வேண்டுமானால் ஐஏஎஸ் அதிகாரி ஒருவரைத்தான் நியமிக்க வேண்டுமென சொல்லியிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மிஸ்டர் பத்தூர் நகரத்துல மலர் பார்ட்டி மாநாடு, ஆளில்லாமல் அப்செட்டில் முடிஞ்சிட்டாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘மிஸ்டர் பத்தூர் நகரத்துல ஓல்டு பஸ் ஸ்டேண்ட் பகுதியில பழங்குடியினர் அணி மாநாடு மலர் பார்ட்டிக்காரங்க நடத்துனாங்க.. இந்த மாநாடு நடத்துறதுக்கு முன்னாடியே பிரச்னை தொடங்கிடுச்சு.. அது என்னென்னா? ஜவ்வாது மலைவாழ் மக்கள் நாங்க தான் பழங்குடியினர், இவர்கள் போலியான பழங்குடியினர், இவர்கள் மாநாட்டை நடத்துறாங்கன்னு மறியல் போராட்டத்துல குதிச்சாங்க.. அதையும் தாண்டி, மாநாடு நடந்துச்சு.. ஆனா, மாநாட்டுக்கு பழங்குடியினர் வரவில்லையாம்.. பழங்குடியினர் மட்டுமில்லா, மலர் பார்ட்டிகள் அழைப்பிதழ்ல அச்சடிச்ச நிர்வாகிகளும் வரவில்லையாம்..

தேசிய மகளிர் அணி தலைவி மட்டும் கலந்துகிட்டாங்களாம்.. கூட்டம் இல்லாததை பார்த்து அவங்களும் அப்செட் ஆயிட்டாங்களாம்.. அதோட, இந்த மாநாடு நடத்துறதுக்கு, அனைத்து துறை ஆபிசர்ஸ்கிட்டயும், அந்த பிரிவு நிர்வாகி மாநாட்டு பெயரைச் சொல்லி சம்திங் வேட்டை நடத்தியிருக்குறதாக புகார் ஒலிக்கத் தொடங்கியிருக்குது.. இப்படி மக்கள் தொடங்கி, அரசு துறை வரையில பல புகார்களுக்கு ஆளாகியிருக்குது இந்த மாநாடு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.