Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கடல் உணவுகளில் புதுப்புது வெரைட்டி!

செஸ்வான் ஃபிஷ்...சிங்கி இறால் ஹாட் கார்லிக்...

தமிழகத்தின் அழகிய கடற்கரைகளில் ஒன்றான பெசன்ட் நகர் கடற்கரையில் கடலைப் பார்த்தபடி அமைந்திருக்கிறது போட் ஸ்டாப்பர் ரெஸ்டாரன்ட். நீங்கள் யூகிப்பது சரிதான். கடற்கரையில் அமைந்திருக்கிறது. கடல் உணவுகள்தான் இங்கு ஸ்பெஷல். மீன், நண்டு, இறால், சிங்கி இறால், சங்குக்கறி என கடலில் கிடைக்கும் அனைத்திலுமே பல வகையான உணவுகளை தயார்த்துக் கொடுக்கும் இந்த உணவகம் அந்தப் பகுதியின் லேன்ட் மார்க்காகவே மாறி இருக்கிறது. எம்பிஏ படித்துவிட்டு எம்என்சி கம்பெனியில் பணிபுரிந்த மணிகண்டன் என்பவர்தான் இந்த உணவகத்தை நடத்துகிறார். வெப்பக்காற்று அடங்கி, இதமான கடல் காற்று வீசிய ஒரு மாலைப்பொழுதில் மணிகண்டனைச் சந்தித்தோம். போட் ஸ்டாப்பர் ரெஸ்டாரன்ட் உருவான கதையையும், அங்கு கிடைக்கும் சீ ஃபுட்ஸ் பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

``அப்பாவுக்கு கடல் தொழில்தான். அதனால கடலைப் பற்றியும் மீன்களைப் பற்றியும் எனக்கு நன்றாகவே தெரியும். மீனைப் பார்த்தே அதன் தரத்தைச் சரியா சொல்ல முடியும். அந்தளவுக்கு கடல் உணவுகளைப் பற்றி முழுமையாகத் தெரிஞ்சி வச்சிருக்கேன். இருந்தாலும் நான் மீன்பிடி தொழிலுக்கு வரக்கூடாது என்பதில் அப்பா உறுதியாக இருந்தார். அதனால், என்னை எம்.பி.ஏ வரை படிக்க வைத்தார். நானும் படிப்பு முடிந்ததும் மல்டி நேஷனல் நிறுவனங்களில் ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தேன். இருந்தாலும், யாருக்காகவோ உழைத்துக் கொடுப்பதனால் நமக்கு சம்பளம் மட்டுமே மிஞ்சுகிறது என்ற எண்ணம் மனதில் அழுத்திக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் இனி நமக்காக நாம் உழைத்தால் என்ன? என்ற எண்ணம் வந்தது. வேலையை விட்டுவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தேன்.

மீனவக் குடும்பம், சிறுவயது முதலே மீன்களைப் பற்றி நல்லா தெரியும், அதனால் நமக்குத் தெரிந்த மீனை வைத்தே தொழில் தொடங்கலாம் என்ற எண்ணத்தில்தான் இந்த ரெஸ்டாரன்டைத் தொடங்கினேன். இந்த உணவகம் இருக்கும் இடம் படகுகள் நிறுத்தி வைக்கும் இடம். இந்த உணவகத்துக்கு முன்பு எப்போதும் படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும். அதனால் இந்த ரெஸ்டாரன்ட்க்கு போட் ஸ்டாப்பர் என்று பெயர் வைத்தேன். இங்கே கடல் சார்ந்த உணவுகள்தான் பிரதானமாக இருக்கும். அதிலும், இங்க கிடைக்கிற நண்டுகள் எல்லாம் உயிருடன் இருக்கும். அதன்படியே லாப்ஸ்டரும் உயிருடன் இருக்கும். உணவருந்த வருபவர் எந்த மீன் வேண்டும், எந்த நண்டு வேண்டும் என்று கேட்கிறார்களோ, அதனை சமைத்துக் கொடுப்போம்.தரமான உணவைக் கொடுத்தால் மக்கள் நம்மைத் தேடி வருவார்கள் என்பதற்கு நானே ஒரு உதாரணம்.

இங்கே மீன் வகைகள், நண்டு, இறால், கடம்பா, ஆயிஸ்டர், லாப்ஸ்ட்டர்ஸ் ஆகியவை மிகவும் பிரபலம். இதில் ஆயிஸ்டர் என்பது சிப்பி வகையைச் சார்ந்தது. லாப்ஸ்ட்டர்ஸ் என்பது இறாலும் நண்டும் கலந்த ஒரு கலப்பினமான சிங்கி இறால். எங்கள் உணவகத்தைப் பொறுத்தவரை, அன்று பிடித்து வந்த மீன்களை அன்றே சமைத்துவிடுவோம். எல்லாமே ஃபிரஷ்தான். அதுபோல, தினசரி ஒரே மீன்களையும் கொடுப்பதில்லை. அன்று என்ன மீன் கிடைக்கிறதோ அதைத்தான் சமைப்போம். அதுபோல, எங்கள் உணவுகளில் எந்தவித கெமிக்கல் கலப்புகளும் கிடையாது. மசாலாவுக்கு தேவையான மிளகு, சீரகம் போன்றவற்றை கேரள விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்கிறோம்.

பொதுவாக, மீன்களை வறுத்தோ அல்லது குழம்பு வைத்தோதான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால், எப்படி சிக்கனில் சிக்கன் 65, செட்டிநாடு சிக்கன் கறி, தந்தூரி என பல வகைகள் இருக்கிறதோ அதேபோல நாங்கள், வித்தியாசமாக பல ஃப்ளேவர்களில் பல வெரைட்டிகளில் மீனை சமைத்து கொடுக்கிறோம். ஒவ்வொரு ரெசிபியும் நாங்களே யோசித்து யோசித்து உருவாக்கியது. இதை உண்ணுபவர்கள் மட்டுமே இந்தச் சுவைகளை உணர முடியும். உதாரணமாக, பிரஷ்ஷான ஆரஞ்சுப் பழத்தில் இருந்து சாறை எடுத்து அதிலிருந்து சாஸ் தயாரித்து அதை மீன் மீது ஊற்றிக் கொடுப்போம். இந்த ஸ்பெஷல் மீன் அத்தனை சுவையாக இருக்கும். எங்கள் உணவகத்தில் கிடைக்கும் பல உணவுகள் சைனீஸ் ஃப்ளேவரில் இருக்கும். மக்களும் அதை மிகவும் விரும்புகிறார்கள்.

அந்த வகையில், ஆரஞ்சு சாஸ், டாங்கி, பார்பிக்யூ, பெப்பர் மசாலா பிஷ் இங்கே வெரி ஸ்பெஷல். அதிலும் அதிக வரவேற்பு உள்ள அயிட்டம் என்றால், சிங்கி இறால் ஹாட் கார்லிக், பட்டர் கார்லிக், க்ரீமி, செஸ்வான் ஃபிஷ் அயிட்டங்கள் ரொம்பவும் பிரபலம். ரொம்ப ஸ்பைஸியாகவும், சுவையாகவும் இருக்கும். என்னைப் பொருத்தவரை, உணவகங்களுக்குச் சென்றால், பெரும்பாலும் கடல் உணவுகளை சாப்பிடுவதுதான் பாதுகாப்பானது. கடல் உணவுகளில் எந்த கலப்படமும் செய்ய முடியாது. ஒருவேளை மீன் பழையதாக இருந்தாலும், அது உடலுக்கோ, உயிருக்கோ எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. அதுவே, சிக்கன், மட்டன் பழையதாக இருந்தால் அது உடலில் பலபிரச்னைகளை நிச்சயம் ஏற்படுத்தும். நமது உணவு தரமானதாக இருக்க வேண்டும். அதே சமயம், அவை வித்தியாசமானதாகவும் இருக்க வேண்டும். இதைத்தான் இன்றைய உணவுப் பிரியர்கள் விரும்புகிறார்கள். நானும் அதில் உறுதியாக இருக்கிறேன்” என்று பேசி முடித்தார் மணிகண்டன்.

- ச.விவேக்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்