கடலை அடைத்து அணை ரூ.1.33 லட்சம் கோடியில் சுற்றுச்சூழல் கல்லறை? குஜராத்தின் கல்பசார் திட்டத்தில் மறைந்திருக்கும் அபாயம்
கடலையே அணையாக மாற்றி, வறட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியுமா? கம்பத் வளைகுடாவின் குறுக்கே 60.13 கி.மீ. நீளத்தில் தடுப்பணை... அதன் கொள்ளளவு சுமார் 7,807 மில்லியன் கன மீட்டர் (275.70 டிஎம்சி) தண்ணீர். மொத்த திட்ட மதிப்பு ரூ.1.33 லட்சம் கோடி. குஜராத் அரசு கனவு காணும் ‘கல்பசார் திட்டத்தின்’ பிரமாண்டம் இது. சவுராஷ்டிராவின் நீர்ப்பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு, விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நீர்,
தடுப்பணையின் மீது சாலை ரயில் இணைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி என பல்வேறு இலக்குகளைக் கொண்ட இந்தத் திட்டம் பிரமாண்டதாக தோன்றினாலும், இயற்கையுடன் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய ஆபத்தான பரிசோதனையாக மாறுமா என்பதுதான் இந்த திட்டத்தின் உண்மையான சவால் என்கின்றனர் நிபுணர்கள். இந்த திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக ஒன்றிய அரசு கடந்த ஜூலை மாதம் தெரிவித்திருந்தது.
சபர்மதி, மகி, தாதர், மற்றும் நர்மதா உள்ளிட்ட முக்கிய ஆறுகள் மற்றும் சிறிய ஆறுகளின் நீரோட்டம் தான் இந்த திட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம். இந்த ஆறுகள் சங்கமிக்கும் இடமான கம்பத் வளைகுடாவை குறுக்கே தடுத்து தான் தடுப்பணையை உருவாக்கப்போகிறார்கள்.
அலை சீற்றம் அதிகம்: கம்பத் வளைகுடா, சுமார் 13 மீட்டர் வரை அலை எழக்கூடிய கடல் பகுதி என திட்ட ஆய்வுகளிலேயே குறிப்பிடுகின்றன. வலுவான கடல் நீரோட்டங்களும் காணப்படுகின்றன. வளைகுடாவின் தென்பகுதி சுமார் 180 கி.மீ. அகலமாக இருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது பெருமளவில் குறுகுகிறது.
இத்தகைய இடத்தில் 60 கி.மீ. நீள தடுப்பணை அமைத்து, ஒரு புறம் கடலையும் மறுபுறம் நன்னீரையும் வைத்திருப்பது மிகப்பெரிய பொறியியல் சவால் என்றுதான் கூற வேண்டும். ஆனால் ஒன்றிய அரசின் விரிவான திட்ட அறிக்கையில், இதற்கேற்ற பொறியியல் தொழில்நுட்பங்களும், உப்பு நீர் கலக்காமல் தடுக்கும் வகையில் கட்டமைப்புகள் இடம் பெற உள்ளதாக தெரிவிக்கிறது.
நெதர்லாந்து முன்மாதிரி: நெதர்லாந்தில் ஏறக்குறைய இதே பாணியில்தான் கடலை அடைத்து 32 கி.மீ.க்கு அப்ஸ்லூட்திக் (Afsluitdijk) என்ற தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. இதனை முன்மாதிரியாக வைத்துத்தான் குஜராத்தில் மேற்கண்ட அணை கட்டப்பட இருக்கிறது. கடந்த மே மாதம் பிரதமர் மோடி நெதர்லாந்து சென்றபோது, அப்ஸ்லூட்திக் அணையைப் பார்வையிட்டார்.
அதன்பிறகு குஜராத்தின் கல்பசார் திட்டத்திற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, டச்சு தொழில்நுட்ப கழகம் மூலம் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதன்பிறகு, ஜூலை மாதம் இந்திய நீர்வளத்துறை செயலர் தலைமையிலான குழு நெதர்லாந்து சென்று அப்ஸ்லூட்திக், டெல்ப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், டெல்ட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் ஆலோசனை மேற்கொண்டது.
எனினும், நெதர்லாந்தில் அப்ஸ்லூட்திக் அணை அமைந்துள்ள கடலியல் சூழலையும், குஜராத் மாநிலம் காம்பத் வளைகுடாவில் உள்ள கடலியல் சூழலையும் ஒன்றாக கருத முடியாது என்பது அறிஞர்களின் வாதமாக உள்ளது. ஏனெனில் 2 திட்டங்களின் கடலியல் சூழல், அலை இயக்கம், வண்டல் சேர்க்கை, ஆற்றுநீர் வரத்து, நில அமைப்பு, உப்புத்தன்மை, மீன்வளம், காலநிலை ஆகியவை ஒன்றல்ல என்கின்றனர் அவர்கள்.
புவியியல் மற்றும் நில அதிர்வு அபாயம்: என்னதான் முன்மாதிரியாக உள்ள வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும், கல்பசார் திட்டத்தின் தொழில்நுட்ப சாத்தியம் குறித்து நீண்டகாலமாகவே விவாதங்கள் உள்ளன. இதுகுறித்து சமூகவியலாளரும், பாவ்நகர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் வித்யுத் ஜோஷி கூறுகையில், ‘‘கம்பத் வளைகுடாவில் மேற்கொண்ட ஆய்வுகள், இப்பகுதியில் கடலடியில் மிக ஆழமான மென்மையான வண்டல் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன.
4.40 கோடி கன மீட்டர் மண், 4.04 கோடி கன மீட்டர் மணல் மற்றும் 20 கோடி கன மீட்டர் கான்கிரீட் ஆகியவற்றைக் கொண்டு இந்த பிரமாண்ட அணை கட்டப்படுவதாக கூறப்படுகிறது.இத்தகைய பிரமாண்ட அணை தாக்குப்பிடிக்க 10 மீட்டர் ஆழத்திற்குள் உறுதியான பாறை அடித்தளம் தேவை. ஆனால், அணை அமைக்க உள்ள பகுதியில் 348 மீட்டர் ஆழம் வரை மென்மையான வண்டல் மண் படிமங்கள் தான் இருப்பதாகவும் அதற்கும் அப்பால்தான் பாறை அடித்தளம் இருப்பதாகவும் ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதனை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்’’ என்றார்.
எனவே, எதிர்காலத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் அணை உடைந்தால் அது மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தக் கூடும் எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். மேலும் இந்த திட்டத்தில் 16 வழிச்சாலை மற்றும் 4 ரயில் பாதைகள் கொண்ட இணைப்பு திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பாதை அமைத்தால் பாவ்நகர்சூரத் இடையேயான பயண தூரம் 356 கி.மீ.ல் இருந்து 177 கி.மீ. ஆக குறையும் என்கின்றனர்.ஆனால், இந்த போக்குவரத்து நன்மைக்காக ரூ.1.33 லட்சம் கோடி தடுப்பணை பொருளாதார ரீதியாக நியாயமானதா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
கடல் மீன்வளம் என்ன ஆகும்? கம்பத் வளைகுடா திட்டத்தால் கடல் மீன்களின் வாழ்விடம் மாறலாம். அப்பகுதியில் “ஹில்சா மீன் வளம் அதிகம் உள்ளது. இந்த மீன்களின் இனப்பெருக்கச் சுழற்சி பாதிக்கப்படும், வண்டல் மண் நகர்வு மாறலாம், கடலோர உயிரினங்களின் சூழல் மாறலாம், உப்புத்தன்மை பரவல் மாறலாம் என சுற்றுச்சூழல் தொடர்பான அச்சங்கள் முன்வைக்கப்படுகின்றன.
திட்ட அளவில் இது பிரமாண்டமானதாக தோற்றினாலும், கடலின் இயற்கையான நீரோட்டம், வண்டல் நகர்வு, உப்புத்தன்மை, மீன்களின் இனப்பெருக்கச் சுழற்சி, கடலோர உயிரியல் சூழல் என பலவற்றிலும் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்த கேள்விகளும் விடை காணப்படாமல் உள்ளன.
வறட்சிக்குத் தீர்வு காண கடலைத் தடுக்கப் போகிறோம். ஆனால், அந்தத் தடுப்பு நாளை இயற்கைக்கே தீராத பிரச்னையாக மாறிவிடக்கூடாது. ரூ.1.33 லட்சம் கோடியின் இந்தப் பெருங்கனவு குஜராத்தின் நீர்வள எதிர்காலத்தை உருவாக்குமா, அல்லது இயற்கைக்கு கட்டப்படும் விலையுயர்ந்த கல்லறையாக மாறுமா? என்பதுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் முன் வைக்கும் பெரும் கேள்வியாக உள்ளது.
* நதிகளை இணைத்தால் நாடே வளம் பெறும்
குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதிக்கு மட்டும் பயன்தரும் கல்பசார் திட்டத்துக்கு ரூ.1,33,246 கோடி செலவிடப் படுகிறது. இந்த திட்ட செலவுக்குள் அடங்கக்கூடிய சில நதிநீர் இணைப்பு திட்டங்கள் வருமாறு: கென்பெட்வா - ரூ.44,605 கோடி (உபி - மத்திய பிரதேசம்), யமுனா - ராஜஸ்தான் ரூ.33,744.64 கோடி (ஹரியானா - உபி), ராஜஸ்தான் - சபர்மதி ரூ.25,299.39 கோடி (ராஜஸ்தான், குஜராத்) , பார்- தாபி - நர்மதா ரூ.10,211 கோடி (குஜராத், மகாராஷ்டிரா),
டாமன் கங்கா - பிஞ்சால் ரூ.3,008 கோடி (மகாராஷ்டிரா - மும்பைக்காக மட்டும்), கோதாவரி-கிருஷ்ணா- காவேரி இணைப்பு ரூ.85,000 கோடி ( தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா), கல்பசாரின் செலவு கென்பெட்வா திட்டத்தைவிட சுமார் 3 மடங்கு; யமுனா - ராஜஸ்தான் திட்டத்தைவிட 3.9 மடங்கு; ராஜஸ்தான்- சபர்மதி திட்டத்தைவிட 5.3 மடங்கு; பார் - தாபி - நர்மதா திட்டத்தைவிட 13 மடங்கு அதிகம்.
நாடு முழுவதும் 30 நதிநீர் இணைப்புத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், 26 திட்டங்களுக்கு சாத்தியக்கூறு அறிக்கை, 13 திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கை முடிந்துள்ளன. ஆனால் 2026 ஆகஸ்ட் நிலவரப்படி, தேசிய திட்டத்தின் கீழ் செயலாக்க நிலைக்கு சென்றிருப்பது கென்பெட்வா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, கல்பசார் போன்ற இயற்கைக்கு பேராபத்து விளைவிக்கும் சாத்தியமுள்ள திட்டங்களை தவிர்த்து, அந்த நிதியில் நதிநீர் இணைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


