Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

முழு அறிவியலையும் முழுமையாக உள்வாங்கி எதிர்கால உலகை மாற்றப்போகும் ஜெனரேஷன் பீட்டா: மாற்றத்திற்கான அடுத்த தலைமுறையினர் செய்யப்போவது என்ன?

மாற்றம் ஒன்றே மாறாதது.இந்த வாக்கியம் எதற்கு பொருந்துமோ இல்லையோ மனித குலத்திற்கு நன்றாக பொருந்தும். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்களின் நாகரிகம் உணவு, உடை, கலாச்சாரம், பண்பாடு இவை அனைத்தும் மாறி வருகிறது. கற்காலத்தில் இருந்த மனிதர்களை கண்டு அதன் பிறகு வந்தவர்கள் வியந்தனர். அதன் பிறகு ஒவ்வொரு 30 வருடங்களுக்கு பின்பும் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது.

மனிதர்கள் தங்களின் வசதிகளுக்காக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினர். மேலும் நாகரிக வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி, சமூக வலைதள வளர்ச்சி போன்ற பல்வேறு வளர்ச்சிகளால் உலகம் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்த மனிதர்கள் நமக்கு பல்வேறு விஷயங்களை கற்றுக் கொடுத்து சென்றுள்ளனர். அதனை மனிதர்கள் முழுமையாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் ஓரளவுக்கு நம் முன்னோர்கள் விட்டுச் சென்றதை கடைபிடித்து வருகின்றனர்.

உலக நாடுகளோடு ஒப்பிடுகையில் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு போன்ற விஷயங்களில் இந்தியா மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் சிறந்து விளங்குகிறது என்றால் அதற்கு காரணம் நம் முன்னோர்கள் விட்டுச் சென்ற வாழ்வியல் முறைகள். வருங்காலங்களில் அதனை வரும் சந்ததியினர் பின்பற்றுவார்களா என்றால் கண்டிப்பாக அது ஒரு கேள்விக்குறியே. நாகரிக வளர்ச்சி அடைந்த பிறகு சமூக வலைதளங்களின் அசுரவிதமான வளர்ச்சியால் இன்று பல்வேறு மாற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம்.

அதனை இப்போது உள்ள பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் தங்களது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தங்களை மாற்றிக் கொண்டு பிள்ளைகளோடு சேர்ந்து வாழ பழகி விட்டனர். வருங்காலங்களில் இது மேலும் அதிகரித்து குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்பதற்கு பெற்றோர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய சூழல் வரும் என பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த அளவிற்கு அடுத்த தலைமுறையினரை கையாள்வதில் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப் பெரிய சவால் காத்துக் கொண்டிருக்கிறது.

உலகம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), காலநிலை மாற்றம், உலகமயமாக்கல், இணையத்தின் பரவல் போன்றவை மனித வாழ்வை பெருமளவில் மாற்றியுள்ளன. இந்த மாற்றங்களின் அடிப்படையில் சமூக ஆய்வாளர்கள் மற்றும் மக்கள்தொகை ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் பிறந்த மக்களை வெவ்வேறு தலைமுறைகளாக வகைப்படுத்துகின்றனர்.

இன்று நாம் அதிகம் பேசும் தலைமுறை ஜெனரேஷன் Z (GEN Z). அதற்கு பிறகு ஜெனரேஷன் ஆல்பா Gen Alpha வந்துள்ளது. தற்போது உலகம் கவனிக்கத் தொடங்கியிருப்பது ஜெனரேஷன் பீட்டா (Generation Beta)

ஆகும். தலைமுறைகள் எப்படி பிரிக்கப்படுகின்றன என்று பார்த்தால் பொதுவாக சமூக ஆய்வாளர்கள் தலைமுறைகளை பின் வருமாறு வகைப்படுத்துகின்றனர்:

Baby Boomers-1946 முதல் 1964 வரை

Generation X-1965 முதல் 1980 வரை

Millennials (Generation Y) - 1981 முதல் 1996 வரை

Generation Z-1997 முதல் 2012 வரை

Generation Alpha-2013 முதல் 2024 வரை

Generation Beta-2025 முதல் 2039 வரை. இந்த பிரிவுகள் சட்டப்பூர்வமானவை அல்ல. சமூக மாற்றங்கள், பொருளாதார சூழல், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் வகைப்பாடுகள் இவை.ஜெனரேஷன் பீட்டா யார்?

2025 முதல் பிறக்கும் குழந்தைகள் “ஜெனரேஷன் பீட்டா” என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் வளரப்போகும் உலகம், இதற்கு முன் எந்த தலைமுறையும் அனுபவிக்காத அளவுக்கு தொழில்நுட்பம் நிறைந்ததாக இருக்கும். இவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், தானியங்கி வாகனங்கள், ஸ்மார்ட் நகரங்கள், விரிவாக்கப்பட்ட மெய்நிகர் (AR), மெய்நிகர் உலகம் (VR) போன்றவை சாதாரண வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும். முந்தைய தலைமுறைகள் கணினி, இணையம், ஸ்மார்ட்போன் ஆகியவற்றை கற்றுக்கொண்டனர்.

ஆனால் ஜெனரேஷன் பீட்டா பிறக்கும் காலத்திலிருந்தே ஏஐ அவர்களின் கல்வி, மருத்துவம், பொழுதுபோக்கு, வேலை, தகவல் தொடர்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இருக்கும். பாடம் சொல்லும் ஆசிரியருடன் ஏஐ உதவியாளரும் இருப்பார். மருத்துவருடன் ஏஐ நோயறிதல் அமைப்பும் இருக்கும். மொழிபெயர்ப்பு, தகவல் தேடல், நிரலாக்கம், கலைப் படைப்பு போன்ற பல துறைகளில் ஏஐ இயல்பான கருவியாக இருக்கும்.

ஜெனரேஷன் பீட்டா மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டம் அல்லாமல், ஒவ்வொரு மாணவரின் திறமைக்கேற்ப ஏஐ அடிப்படையிலான தனிப்பயன் கல்வி வழங்கப்படும் வாய்ப்பு அதிகம். மெய்நிகர் ஆய்வகங்கள், 3D கற்றல், VR வகுப்பறைகள், உடனடி மதிப்பீடுகள் போன்றவை அதிகரிக்கும். இன்றுள்ள பல வேலைகள் எதிர்காலத்தில் தானியக்கமாக மாறலாம். அதே நேரத்தில் ஏஐ நிபுணர், ரோபோடிக்ஸ் பொறியாளர், தரவு விஞ்ஞானி, காலநிலை தொழில்நுட்ப நிபுணர் போன்ற புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இதனால், ஜெனரேஷன் பீட்டா தொடர்ச்சியாக புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டிய தலைமுறையாக இருக்கும். இந்த தலைமுறையினர் எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால்களில் ஒன்று காலநிலை மாற்றம். அதிக வெப்பநிலை, நீர் பற்றாக்குறை, கடல் மட்ட உயர்வு, இயற்கை பேரிடர்கள் போன்றவை அவர்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடும்.

இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பசுமை தொழில்நுட்பம் ஆகியவை அவர்களின் வாழ்வின் முக்கிய அங்கமாக இருக்கும். இதுபோன்ற பல மாற்றங்கள் மற்றும் சவால்களோடு அடுத்த தலைமுறையினர் இந்த உலகை ஆளச் போகின்றனர். இவர்களை பெற்றோர்கள் மற்றும் இந்த சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது புதிய தலைமுறையினர், இந்த சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

* பெற்றோர்களின் பொறுப்பு

ஜெனரேஷன் பீட்டா குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோருக்கு புதிய சவால்கள் உருவாகும். குழந்தைகள் செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர் போன்ற மின் சாதனங்களில் நேரத்தைக் கட்டுப்படுத்துதல், ஏஐ-தொழில் நுட்பத்தை சரியாக பயன்படுத்த கற்றுக்கொடுப்பது, மனித உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவது, புத்தக வாசிப்பு, விளையாட்டு, கலை, சமூகப் பழக்கம் ஆகியவற்றை ஊக்குவிப்பது, இணைய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற விஷயங்களில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

* அரசின் கடமை

உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா முக்கியமானது. ஜெனரேஷன் பீட்டா இந்தியாவின் கல்வி, தொழில்நுட்பம், தொழில் முனைவோர் வளர்ச்சி, அறிவியல் ஆராய்ச்சி ஆகிய துறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் திறன் கொண்டுள்ளது. அதே நேரத்தில், தரமான கல்வி, இணைய அணுகல், டிஜிட்டல் சமத்துவம், திறன் மேம்பாடு போன்றவற்றில் அரசும் சமூகமும் அதிக முதலீடுகளை செய்ய வேண்டியது அவசியம்.

* சமூகப் பொறுப்பு

ஒவ்வொரு தலைமுறையும் ஒரு புதிய உலகத்தை உருவாக்கியுள்ளது. ஜெனரேஷன் பீட்டா உருவாக்கப்போகும் உலகம் செயற்கை நுண்ணறிவும் மனித அறிவும் இணைந்து செயல்படும் உலகமாக இருக்கலாம். ஆனால் தொழில்நுட்பம் எவ்வளவு முன்னேறினாலும் மனிதநேயம், ஒழுக்கம், பொறுப்பு, கருணை, சமூக அக்கறை ஆகியவை நிலைத்திருக்க வேண்டும்.

எதிர்காலத்தை மாற்றப்போகும் தலைமுறை ஜெனரேஷன் பீட்டா. அந்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு இன்றைய பெற்றோர், ஆசிரியர்கள், மற்றும் சமூகத்தின் ஒவ்வொருவரிடமும் உள்ளது. தொழில்நுட்பத்தில் திறமையானவர்களாக மட்டுமல்லாமல், மனிதநேயமும் சமூகப் பொறுப்பும் கொண்ட குடிமக்களாக அவர்களை உருவாக்குவதே நமது மிகப்பெரிய கடமையாகும்.