சென்னை: ஊட்டியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச்சென்று 10ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த திருத்தணி வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் நாகராஜ் (20). இளங்கலை பொருளாதாரம் படித்த இவர் சில காரணங்களுக்காக படிப்பை பாதியில் நிறுத்தினார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி அறிமுகம் ஆனார். நீண்ட நாட்களாக இவர்கள் இருவரும் பேசி பழகி வந்துள்ளனர்.
இருவரும் அவர்களின் புகைப்படங்களை பரிமாறிக்கொண்டனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நாகராஜ் அடிக்கடி ஊட்டிக்கு வந்து மாணவியை பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாணவி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து ஊட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமி எங்கு சென்றார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.
இதைத்தொடர்ந்து மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை கண்காணித்து சமூக வலைதள கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, நாகராஜுடன் மாணவி பழகி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் செல்போன் சிக்னல் மூலம் நாகராஜை கண்காணித்தனர்.அப்போது, ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அவர் இருந்தது தெரியவந்தது.
நேற்று அங்கு சென்ற போலீசார் தனியார் விடுதியில் சோதனையிட்டனர். அங்கு ஒரு அறையில் மாணவியுடன் நாகராஜ் இருந்தார். அவரை மீட்ட போலீசார் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை, நாகராஜ் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நாகராஜை நேற்று கைது செய்தனர்.



