தாம்பரம், செப்.3: கிழக்கு தாம்பரத்தில், கிறிஸ்து ராஜா பள்ளி அருகே மேஜர் முகுந்த் வரதராஜன் சாலையை ஒட்டி பேருந்து நிறுத்தம் உள்ளது. கிறிஸ்து ராஜா, சங்கரா பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என பலர் அந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்து வெளியே வந்த மாணவர்கள் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர்.
அப்போது சற்றும் எதிர்பார்க்காத நிலையில் நிறுத்தத்தை ஒட்டி செல்லும் மழைநீர் கால்வாயின் மேனுவல் மூடி உடைந்து 6 அடி கால்வாயில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் தவறி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அலறிக் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் மழைநீர் கால்வாயில் விழுந்து படுகாயமடைந்த மாணவியை மீட்டனர்.
இந்த மேனுவல் உடைந்து மோசமான நிலையில் இருப்பதாக புகார் தெரிவித்ததாகவும், நெடுஞ்சாலைத் துறையினர் இதை கண்டுக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததே மாணவி கால்வாயில் விழுந்து காயமடைந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதேபோல் பல இடங்களில் மேனுவல் உடைந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. காமராஜபுரத்தில், பேருந்து நிறுத்தத்தை ஒட்டி, அம்மா உணவகம், ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய நலக்கூடம், மண்டல அலுவலகம் செல்லும் நுழைவாயிலில் மேனுவல் உடைந்து எந்த நேரத்திலும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஒரு வருடமாக இது நீடித்தும், நெடுஞ்சாலைத் துறையினர் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.



