பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு: சூப்பர் க்ளீன் சூப்பர் கேம்பஸ் திட்டத்திற்கு ரூ.139 கோடி ஒதுக்கீடு
சென்னை: 2026-27ம் ஆண்டு தமிழக நிதி நிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூர.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளை சுத்தம் செய்யும் வகையில் சூப்பர் க்ளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம் ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அரசு பள்ளிகளில் தொழில்முறை தூய்மைப்பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த நடைமுறை இல்லா நிலையை கருத்தில் கொண்டு ‘சூப்பர் க்ளீன் சூப்பர் கேம்பஸ்’ திட்டத்தினை அரசு செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ் தினசரி தூய்மை பணிகள், குடிநீர் வசதிகள் மற்றும் கழிப்பறைகள் பராமரிப்பு மற்றும் பள்ளி வளாகங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்படும். முதற்கட்டமாக 10 ஆயிரம் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.139 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை நவீனமயமாக்கும் நோக்கத்தில் ‘பள்ளி நிறைவு திட்டம்’ அறிமுகம் செய்யப்படுகிறது. 2,514 தொடக்க பள்ளிகள், 365 நடுநிலை பள்ளிகள் மற்றும் 855 உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் என மொத்தம் 3,734 பள்ளிகளில் ரூ.2,132 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கிய பின்னணியில் இருந்து வரக்கூடிய கல்வித்திறன்மிக்க மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நோக்கத்தில் பெருந்தலைவர் காமராசர் சிறப்பு பள்ளிகள் - நவீன உண்டு உறைவிடப்பள்ளிகளை அரசு நிறுவிடும். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பயிலும் இப்பள்ளிகளில், கல்வி, உணவு, தங்குமிடம், பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் அவர்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படும். இதற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி பாடத்திட்டத்தை மறு சீரமைக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்புகளும், தன்னார்வக் குழுக்களும் அமைக்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
