Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சீர்காழி அருகே ஓரம்புத்தூரில் 50 ஆண்டுகளை கடந்து ஆபத்தான நிலையில் இருக்கும் பள்ளி கட்டிடம்

*அச்சத்தில் ஒரே வகுப்பறையில் பயிலும் மாணவர்கள்

*புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே ஓரம்புத்தூரில் இடிந்து விழும் நிலையில் உள்ள 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஓரம்புத்தூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

50 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் இப்பள்ளியில் தற்போது 120க்கும் மேற்பட்ட மாணவர்களும் ஒரு தலைமையாசிரியர் மற்றும் 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளியின் மூன்று வகுப்பறை கட்டிடங்கள் இடிந்து விழும் தநிலையில் இருந்ததால் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஒன்றன்பின் ஒன்றாக மூன்று கட்டிடங்களும் இடித்து அகற்றப்பட்டன.

ஆனால் இந்த மூன்று வகுப்பறை கட்டிடங்களுக்கு பதிலாக புதிய வகுப்பறை கட்டிடங்கள் இதுவரை கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாணவர்கள் ஒரே வகுப்பறை கட்டிடத்தில் அமர்ந்து மிகுந்த சிரமத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். ஆசிரியர்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பள்ளியில் ஒரே வகுப்பறையில் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இருக்கும் ஒரு வகுப்பறை கட்டிடமும் மிகப்பழமையானதாக இருந்து வருவதால் கட்டிடத்தின் மேற்கூறையின் உள்பகுதியில் உள்ள சிமெண்ட் கான்கிரீட் பெயர்ந்து கீழே விழுந்துள்ளது. கட்டிடத்தின் முன் பகுதி வராண்டாவிலும் சிமெண்ட் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் மாணவர்கள் பள்ளி வராண்டாவில் நடமாடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பினை கருதி கயிறு கட்டி முன் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாசல்கள்வழியே மட்டுமே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வகுப்புக்குள் சென்று வருகின்றனர். பள்ளிக்கட்டிடம் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் இருந்து வருகிறது. இருந்தும் ஆபத்தை உணராமல் இக்கட்டிடத்திற்குள் மாணவர்கள் கல்வி பயின்று வரும் கட்டாய நிலையில் இருந்து வருகின்றனர்.

இக்கட்டிடத்தின் ஆயுள் காலம் முடிந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது என கட்டிட பொறியாளர்களால் முன்பு சான்று அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் இந்த கட்டிடம் எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் இருந்து வருகிறது. இதுகுறித்து புத்துரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாபு கூறுகையில், 50 ஆண்டுகள் கடந்த நிலையில் இருக்கும் இந்த பள்ளி கட்டிடத்தில் கடந்த 2019-20ம் ஆண்டு விரிசல் விழுந்த பகுதிகளில் சிறிய அளவில் பழுது நீக்கம் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது.

ஆனாலும் கட்டிடம் இன்னும் அபாய கட்டத்தில் தான் இருக்கிறது. எனவே இந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு உடனடியாக புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்ட மூன்று பள்ளி வகுப்பறை கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்களையும் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது உள்ள இக்கட்டிடத்தை இடிக்க முற்படும் போது தற்காலிகமாக மாணவர்கள் கல்வி பயில்வதற்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கும் வரையில் தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் வகுப்பறை இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.