அறுபது வயது வரை ஆசிரியர் பணி. பின், இருபத்திமூன்று ஆண்டுகள் விவசாயம் என தனது 83வது வயதிலும் நம்பிக்கையோடு இயற்கை விவசாயம் செய்து வருகிறார் தர்மபுரி மாவட்டம் நம்பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன். பத்து ஏக்கர் நிலத்தில் பலவிதமான பயிர்களை சாகுபடி செய்துவரும் இவர், விளைச்சல் பொருட்களை முறையாக விற்பனையும் செய்து விடுகிறார். இவரது சாகுபடி முறை குறித்து அறிய நம்பிபட்டி கிராமத்திற்கு சென்றோம். தோட்டத்தில் விவசாயப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தவர் நம்மை வரவேற்று, தோட்டத்தைச் சுற்றிக் காண்பித்தபடி பேசத் தொடங்கினார். ``விவசாயம் எனக்கு புதிதல்ல. நான் பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். சிறுவயதிலேயே விவசாயம் சார்ந்த அனைத்து வேலைகளையும் அறிந்துகொண்டேன். படித்து முடித்துவிட்டு, ஆசிரியராக பணிபுரிந்து, தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றேன். ஓய்வுக் காலத்தை பயனுள்ளதாக வாழலாமென விவசாயத்திற்குள் மீண்டும் வந்தேன்’’ என்றவர், மேலும் தொடர்ந்தார்.
``எனக்கு சொந்தமாக 10 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. பத்து ஏக்கரில் விவசாயம் செய்கிறேன். ஆரம்பத்தில் ரசாயன முறையில்தான் சாகுபடி செய்தேன். நம்மாழ்வாரின் மேல் ஈர்ப்பு வந்து, இயற்கை முறை சாகுபடியைத் தொடங்கினேன். அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் சாகுபடி பயிர்களை மாற்றிக்கொண்டே இருப்பேன். கடந்த வருடம் செவ்வாழை சாகுபடி செய்து, நல்ல லாபத்திற்கு விற்பனை செய்தேன். இந்த வருடம், கொஞ்சம் மாறுதலாக ேவறு பயிர்களை சாகுபடி செய்கிறேன்.அதாவது, இரண்டு ஏக்கரில் பாக்கு சாகுபடி செய்திருக்கிறேன். அதுபோக, இரண்டு ஏக்கரில் கறிவேப்பிலை, 50 எலுமிச்சை, 300 மா, 100 சப்போட்டா, 50 கொய்யா, 200 தென்னை பயிரிட்டு இருக்கிறேன். ரசாயன முறையில் விவசாயம் செய்யும்போது, மா சாகுபடியில் நல்ல விளைச்சல் வந்தது. வருடத்திற்கு 20ல் இருந்து 30 டன் விளைச்சல் எடுத்தேன். இயற்கை விவசாயத்திற்கு மாறிய பிறகு, மா சுத்தமாக பூப்பதை நிறுத்தியது.
300 மாவில் இருந்து வீட்டிற்குத் தேவையான அளவு மாங்காய் மட்டுமே கிடைத்தது. இருந்தபோதும், நான் இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தவில்லை. தொடர்ந்து இயற்கை முறை விவசாயத்தையே செய்து வந்தேன். வேளாண் அலுவலர்களை அழைத்து வந்து, நடந்ததை விளக்கினேன். இவ்வளவு நாளாக ரசாயன சாகுபடிக்கு பழக்கப்பட்ட மரம் திடீரென இயற்கை இடுபொருட்களை பயன்படுத்துவதால் காய்க்கவில்லை. ஆனால், கட்டாயம் காய்க்கும் எனச் சொன்னார்கள். அதன்படியே, கடந்த வருடம் நல்ல முறையில் விளைச்சல் கொடுத்தது. இந்த வருடம், எல்லா மரத்திலும் பூ பிடித்திருக்கிறது. இவ்வளவு நாட்களாக ரசாயன விவசாயத்தை செய்துவிட்டு, திடீரென இயற்கைக்கு மாறினால் இதுதான் நடக்குமென இப்போது புரிகிறது. அந்த வகையில் இயற்கை முறை சாகுபடி பற்றி எனக்கு முழுமையாக புரிந்ததால், எனது தோட்டத்தில் அனைத்து சாகுபடியையுமே இயற்கை முறையிலேயே செய்து வருகிறேன்.
பத்து அடி இடைவெளியில் எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறேன். அதற்கு நடுவே ஊடுபயிராக கறிவேப்பிலை சாகுபடி செய்து வருகிறேன். அதாவது, இரண்டு எலுமிச்சை செடிகளின் வரிசைக்கு இடையே, மூன்று கறிவேப்பிலை செடியை 2 அடி இடைவெளியில் நட்டிருக்கிறேன். எனது தோட்டத்தில் கறிவேப்பிலை சாகுபடியைத் தொடங்கி 5 வருடங்கள் ஆகிறது. கடந்த 2 வருடங்களாகத்தான் அதை விற்பனைக்கு கொண்டு செல்கிறேன். கறிவேப்பிலையைப் பொருத்தவரை, மிகத் தாமதமாகத்தான் வளரும். 15 நாட்களுக்கு ஒருமுறை கறிவேப்பிலையை பறித்து விற்பனை செய்கிறேன். அதேபோல, இந்த கறிவேப்பிலைச் செடியை நடுவதற்கு முன்பு, குழி பறித்து அதனை இரண்டு மாதம் அப்படியே போட்டுவிட வேண்டும். இரண்டு மாதம் கழித்துதான், செடியை நட வேண்டும். அப்படி நட்டால்தான் குழியில் இருக்கிற வெப்பம் குறைந்து, செடி நன்றாக வளரும்.
அதேபோல, செடியை குழிக்குள் வைத்துவிட்டு ஒரு குழிக்கு ஒரு கிலோ வீதம் மண்புழு உரம் அல்லது தொழு உரத்தை போட வேண்டும். பின், குழிக்குள் சிறிது மண்ணை தள்ளிவிட்டு, மேலாக களிமண்ணை போட வேண்டும். களிமண் போடுவதால், செடிக்கு நீர் பாய்ச்சும்போது அதிக நேரம் ஈரப்பதமாக இருக்கும். இந்த முறையில்தான் நான் அனைத்து சாகுபடியையும் செய்து வருகிறேன். அதேபோல, கறிவேப்பிலையைப் பொருத்தவரை இரண்டு முதல் மூன்று அடிகளுக்கு மேல் வளரவிடக்கூடாது. வளர வளர அதை கவாத்து முறைப்படி வெட்டிக்கொண்டே வர வேண்டும். அப்போதுதான், அதன் பக்கக் கிளைகள் அதிகமாக வளரும்.
பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கறிவேப்பிலை, வாரம் ஒருமுறை எலுமிச்சை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தேங்காய், வருடம் ஒருமுறை மாங்காய் என எனது தோட்டத்தில் இருந்து தொடர் சாகுபடி செய்து வருகிறேன். அதேப்போல, சீசனுக்கு சீசன் சப்போட்டாவும் விற்பனை செய்து வருகிறேன். விளைச்சல் அதிகமாக வந்தாலும் சரி, குறைவாக வந்தாலும் சரி இயற்கை விவசாயத்தை விட மாட்டேன். ஏனென்றால், ரசாயனம் மற்றும் இயற்கை என இரண்டு முறை சாகுபடியிலும் எனக்கு அனுபவமுண்டு. ரசாயன முறை சாகுபடி விளைச்சலை மட்டும்தான் கொடுக்கும். ஆனால், இயற்கை முறை சாகுபடி விளைச்சலோடு சுவை மற்றும் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். அதனால், இயற்கை முறை சாகுபடிதான் செய்வேன்’’ என மனமகிழ்ச்சியுடன் பேசுகிறார் ராதாகிருஷ்ணன்.
தொடர்புக்கு:
ராதாகிருஷ்ணன்: 98650 60369.
*மண்புழு உரம், இயற்கை இடு பொருட்கள் என அனைத்தையும் தனது தோட்டத்திலேயே தயாரித்து வருகிறார் ராதாகிருஷ்ணன். தானே சொந்தமாக தயாரித்து தானே நேரடியாக விவசாயத்திற்கு பயன்படுத்துவதால், இயற்கை உரங்களில் கிடைக்கும் நன்மையை கண்கூடாக காண முடிகிறது என்கிறார்.
*தனது தோட்டத்தில் கிடைக்கும் விளைபொருட்களை சென்னை மற்றும் தர்மபுரியில் உள்ள சந்தைகளில் நேரடியாக விற்பனை செய்கிறார் ராதாகிருஷ்ணன். எலுமிச்சையை வியாபாரிகள் தோட்டத்திற்கு வந்து வாங்கிச் செல்கிறார்கள். மாம்பழங்களை அருகில் உள்ள ஜூஸ் தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அனுப்பி வைக்கிறார்.


