Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சங்கரன்கோவில் அருகே ஓடும் அரசுப் பேருந்தில் தீ: 57 பயணிகள் பத்திரமாக மீட்பு!

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி அருகே ரயில்வே கேட் பகுதியில் ஓடும் அரசுப் பேருந்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காலையில் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என 57 பயணிகளுடன் அரசுப் பேருந்து சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் வருவதற்காக ரயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால், பேருந்து அப்பகுதியில் காத்திருந்தது.

திடீரென பேருந்தின் பேட்டரி பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை ஓரமாக நிறுத்தினார். தொடர்ந்து புகை அதிகரித்த நிலையில், பயணிகள் பேருந்தில் இருந்து வெளியேற முயன்றனர். அப்போது அவசரகால கதவு திறக்கப்படாததால் பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் உடனடியாக உதவிக்கு வந்து, பேருந்தின் கதவுகளை கைகளால் இழுத்துத் திறந்து, அவசரகால கதவையும் திறந்தனர். இதன் மூலம் பேருந்தில் இருந்த 57 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இருப்பினும், தீ விபத்தில் பேருந்தின் சுமார் 80 சதவீதம் பகுதி தீக்கிரையாகி சேதமடைந்ததாக கூறப்படுகிறது. பயணிகள் அனைவரும் உரிய நேரத்தில் மீட்கப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

இதனிடையே, என்ஜிஓ காலனி பகுதியில் உள்ள ரயில்வே கேட் ஒரே வழித்தடமாக இருப்பதால், காலை நேரங்களில் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் ஒரே நேரத்தில் அந்த வழியாகச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. ரயில் வருகையின்போது ரயில்வே கேட் சுமார் 20 நிமிடங்கள் வரை மூடப்படுவதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

பேருந்தில் தீப்பற்றிய சம்பவத்தால் ஏற்பட்ட பரபரப்புடன், அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலையும் காவல்துறையினர் உடனடியாக சீரமைத்தனர்.

அரசுப் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலும் சங்கரன்கோவில் என்ஜிஓ காலனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.