Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சென்னையில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் தூய்மைப்பணியாளர்களை முதல்வர் சந்திக்க மறுப்பது ஏன்?.. பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி

சென்னை: சென்னையில் கடந்த 15 நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை முதல்வர் சந்திக்க மறுப்பது ஏன்?, என்று சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சரமாரி கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: ஆளுங்கட்சியினரின் தேர்தல் வாக்குறுதிகளில், தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற வாக்குறுதிகள் முக்கியமானவை. வாக்குறுதிகள் எல்லாம் உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என்று, சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 15 நாட்களாக தொடர்ந்து போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு, இந்த அவையில் அரசின் கவனத்துக்கு நாங்கள் எடுத்து வரும்போது, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெகு விரைவில் இதற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படும் என்று, இந்த அவையில் பதில் சொல்லியிருக்கிறார். ஆனால், இதுவரைக்கும் எந்த சுமுகமான முடிவும் எட்டப்படவில்லை. இந்த துறைக்கு பொறுப்பு வகிக்கின்ற முதல்வரை, அவர்கள் எல்லோரும் நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கையை வைக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய முதல்வர் சென்ற ஆண்டு, இதேமாதிரி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் செய்யும்போது அவர்களின் கட்சி அலுவலகத்துக்கு அழைத்து வந்து, அவர்களை எல்லாம் சந்தித்து பேசியிருக்கிறார். எனவே, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை, முதல்வர் எப்போது நிறைவேற்றிக் கொடுப்பார். தூய்மைப் பணியாளர்களைச் சந்தித்து முதல்வர் பேசுவாரா?.

அமைச்சர் ராஜ்மோகன்: போராடும் தொழிலாளர்களின் சிரமங்கள் குறித்து அரசு நன்கு அறிந்து வைத்துள்ளது. அவர்களுடைய பல கோரிக்கைகள் தொடர்பான கோப்புகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளன. ஆனால் அவர்களின் பிரதான கோரிக்கைகளில் நிர்வாக சிக்கல் மட்டுமின்றி கடுமையான நிதி சார்ந்த நெருக்கடியும் உள்ளது. பல சங்கங்கள் இருப்பதால் அனைவரையும் ஒன்றாக அழைத்து வெகு விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட உள்ளது. 15 நாட்களாக போராடுவதை எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் முந்தைய ஆட்சிக் காலத்தில் இதே பணியாளர்கள் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தார்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்: எங்கள் ஆட்சிக் காலத்தில் போராட்டம் நடந்தது. இங்கே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பேசும்போது, `100 நாட்களைத் தாண்டி போராட்டம் நடந்தது’ என்று சொன்னார், அப்படியானால் நீங்களும் 100 நாட்கள் தாண்டும் வரை காத்திருக்கப் போகிறீர்களா என்ற கேள்வியைக் கேட்க விரும்புகிறேன். எங்கள் ஆட்சியில் போராட்டம் நடந்தபோது, எங்களின் அப்போதைய அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா அவர்கள் எல்லாம் தூய்மைப் பணியாளர்களைத் தொடர்ந்து சந்தித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்போது ஆட்சியில் இருக்கும்போது ஒரு அமைச்சர்கூட அந்தப் போராட்டக் களத்துக்குச் சென்று அவர்கள் யாரையும் இதுவரை சந்திக்கவில்லை. ஆட்சியில் இல்லாதபோது தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்க தயாராக இருந்த இன்றைய முதல்வர், இப்போது தூய்மைப் பணியாளர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்?.

அமைச்சர் ராஜ்மோகன்: தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகளை எனது அறைக்கு 2 முறை அழைத்து தலா மூன்றரை மணி நேரம் வரை விரிவாகப் பேசியுள்ளேன். முந்தைய ஆட்சியில் ரிப்பன் மாளிகைக்குள் கூட அனுமதிக்கப்படாமல் நடைபாதையில் போராடிய தொழிலாளர்களை, தற்போது வளாகத்திற்குள்ளேயே ஜனநாயக முறையில் போராட அனுமதித்திருக்கிறோம். இந்த பிரச்னையை சுமுகமாக தீர்க்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. கோரிக்கைகள் தொடர்பான அரசு ஆவணங்கள் தயாராகிவிட்டதால் வெகு விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும்இவ்வாறு விவாதம் நடந்தது.

இந்த விவாதம் நடந்த போது முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தான் இருந்தார். ஆனால், அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. அமைச்சர் ராஜ்மோகன் தான் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.