மணல் கொள்ளை குறித்து போலீசில் புகார்; மாணவி, பெண் மீது சரமாரி தாக்குதல்: 15 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
உளுந்தூர்பேட்டை: மணல் கொள்ளை தொடர்பாக காவல்துறைக்கு தகவல் சொன்னதாக கல்லூரி மாணவி உள்பட 2 பெண்கள் மீது 15 பேர் கும்பல் தாக்குதல் நடத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது வைப்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் வசித்து வருபவர் ரமேஷ். நேற்று இவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு சென்ற 15 பேர் கொண்ட கும்பல் ஆற்று மணல் கடத்துவது தொடர்பாக போலீசாருக்கு ரமேஷ் தான் தகவல் தெரிவிக்கிறார் எனக் கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்த அவருடைய மகள் கல்லூரி மாணவி அக்ஷயா (18) என்பவரை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதை தடுக்க வந்த அக்ஷயாவின் சித்தி பாக்கியலட்சுமி (37) என்பவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திருநாவலூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணல் கடத்தல் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் சொன்னதாக கல்லூரி மாணவி உள்ளிட்ட 2 பெண்களை 15 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக தாக்கிய சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



