Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மண்வளத்தைப் பெருக்கும் மகத்தான உரம்!

எந்த வகையான பயிராக இருந்தாலும் அது செழித்து வளர மண்வளமே பிரதானம். மண்வளத்தை சிறப்பாக மேம்படுத்த மண்ணில் அதிக அளவு அங்கங்க சத்துக்களை இடுவது அவசியம். ஒரு ஏக்கர் நிலத்திற்கு 5 டன் மக்கிய தொழுஉரம் இடுவது சாலச்சிறந்தது. தற்போதைய காலகட்டத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை ெவகுவாக குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு போதுமான தொழுஉரம் கிடைப்பதில்லை. எளிய முறையில் உயிர் உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் ஊட்டமேற்றிய தொழுஉரம் தயாரிக்கலாம்.ஒரு ஏக்கருக்கு தேவையான ஒரு டன் ஊட்டமேற்றிய மக்கிய தொழுஉரத்தை பயிர் சாகுபடி துவங்குவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன் நிலத்திலேயே தயாரிக்கலாம். ஒரு டன் மக்கிய குப்பை அல்லது தொழுஉரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மண்ணில் வாழும் வேர்முடிச்சு பாக்டீரியாவான பேசில்லஸ் சப்சிடிஸ், உயிர் பூஞ்சாணங்களான டிரைகோடெர்மா விரிடி, வெர்டிசிலியம் லக்கானி, மெட்டாரைசியம் அனிசோபிலே, பெவேரியா பேசியானா ஆகியவற்றை தலா ஒரு கிலோ எடுத்துக்கொள்ள வேண்டும்.

உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா தலா ஒரு கிலோ எடுத்து அனைத்தையும் கலந்து நிழலான இடத்தில் படுக்கை போல அமைத்து அதன்மேல் வைக்கோல் கொண்டு மூடவேண்டும். இவ்வாறு பெறப்பட்ட ஊட்டமேற்றிய தொழுஉரத்தை பயன்படுத்துவதன் மூலம் மண்ணில் சத்தின் அளவை அதிகப்படுத்தி மண்வளத்தை மேம்படுத்தலாம். இதன்மூலம் பயிர்களுக்குத் தேவையான நீர்ச்சத்து தொடர்ந்து கிடைக்கிறது. மண்ணில் உள்ள பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் பயிர்களுக்கு எளிதில் கிடைக்க வழிவகை செய்கிறது.பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகமாகி மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளைப் பெருக்கி பிற சத்துக்கள் பயிர்களுக்கு கிடைக்கச் செய்கிறது. பல வகையான உயிரியல் கட்டுப்பட்டுக் காரணிகளை தொழுஉரத்துடன் கலந்துவிடுவதன் மூலம் பூச்சி, நோய்கள் பயிர்களைத் தாக்குவதைக் குறைக்கலாம். இதன்மூலம் இயற்கை முறையில் பயிர் பாதுகாப்பை மேற்கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், நஞ்சில்லா உணவையும் பெறலாம்.