Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மண்வளத்தை சிதைக்காமல் மேற்கொள்வதே சிறந்த விவசாயம்!

விவசாயம் செய்வதற்கு வயது ஒரு தடை இல்லை. அதை, நிரூபித்திருக்கிறார் சேலம் மாவட்டம் நல்லாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி. ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்ற கலைச்செல்விக்கு வயது எழுபத்து ஐந்து. இயற்கையின் மீதும் விவசாயத்தின் மீதும் ஆர்வம் கொண்ட இவர் தனது அப்பா காலத்தில் அவருக்குத் துணையாக விவசாய வேலைகளை செய்திருக்கிறார். அதன்பின் குடும்ப வாழ்வு, ஆசிரியப் பணி என இருந்தவர், கடந்த இருபது வருடங்களாக விவசாயத்திலும் முத்திரை பதித்து வருகிறார். அவரது விவசாய முறை குறித்து அறிந்துகொள்ள அவரது கிராமத்திற்கு சென்றிருந்தோம். `` எனக்கு சிறுவயதிலிருந்தே இரண்டு விசயங்கள் மிகவும் பிடிக்கும். ஒன்று விவசாயம், மற்றொன்று திருவள்ளுவர். இயற்கையோடு ஒன்றி வாழ்வதை நான் எப்போதும் விரும்புவேன். அதில் ஒரு பகுதியாகத்தான் விவசாயத்தையும் பார்க்கிறேன்’’ என்ற கலைச்செல்வி மேலும் தொடர்ந்தார்.

``அப்பா வீட்டிலும் சரி, நான் திருமணமாகி வந்த இடத்திலும் சரி, இரண்டு இடத்திலுமே விவசாயம் நடைபெற்றது. நெல், சோளம், கேழ்வரகு போன்ற தானியப் பயிர்கள் முதல் தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் வரை சாகுபடி செய்து வந்தோம். திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகுதான், நான் கல்லூரி படிப்பெல்லாம் படித்துவிட்டு, ஆசிரியர் பணிக்குச் சென்றேன். 27 வருடம் ஆசிரியப் பணி. ஆசிரியராக இருந்தபோதும் கூட, என்னால் முடிந்தளவு விவசாயம் செய்து வந்தேன். பணி ஓய்வுக்குப் பிறகு முழுமையாக விவசாயத்தில் இறங்கி விட்டேன். கடந்த இருபது வருடங்களாக தொடர்ந்து விவசாயம் செய்து வருகிறேன். அதுவும் இயற்கை விவசாயம்தான்.

மண்வளத்தை சிதைத்து செய்யப்படும் ரசாயன விவசாயத்தில் எனக்கு துளியும் ஆர்வமில்லை. அதனால், ஆரம்பத்திலிருந்தே இயற்கை விவசாயம்தான் செய்து வருகிறேன். அதற்காக, நம்மாழ்வாரின் பயிற்சிகளில் எல்லாம் பங்கேற்றியிருக்கிறேன். இயற்கை விவசாயம் சார்ந்து தொடர்ந்து படித்தும் வருகிறேன். இப்போது இரண்டு ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன். ஒரு ஏக்கரில் தென்னையும், முக்கால் ஏக்கரில் சீரக சம்பா நெல்லும், கால் ஏக்கரில் அவரை மற்றும் வாழை சாகுபடியும் செய்து வருகிறேன். என்னைப் பொருத்தவரை விவசாயமென்பது, மண்வளத்தை சிதைக்காமல் இருக்க வேண்டும். அதற்காகத்தான், ஒவ்வொரு அறுவடை முடிந்த பிறகும், நிலத்தில் பலவகையான தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்களைத் தூவி வளர்த்து வருவேன். அவை, நன்கு வளர்ந்து பூ பூக்கும் சமயம் வரும்போது, அதை அப்படியே நிலத்தில் மடக்கி உழுவேன். அப்படிச் செய்வதால் நிலத்திற்குத் தேவையான அனைத்து வகையான சத்துகளும் கிடைக்கிறது. யூரியா, பொட்டாஷ்க்கு பதிலாக இப்படித்தான் அடிச்சத்து கொடுத்து வருகிறேன். பின்பு, இருபது நாட்கள் கழித்து அந்த நிலத்தில் நெல் சாகுபடியைத் தொடங்குவேன்.

தற்போது எனது நிலத்தில் சீரகசம்பா பயிரிட்டு அறுவடைக் காலம் வந்துவிட்டது. சீரகசம்பா 120 நாள் பயிர். நாற்றங்கால் முறையில்தான் இதை பயிரிடுவேன். அதேபோல, ஒரு பயிருக்கும் அடுத்த பயிருக்குமான இடைவெளி ஒரு அடி இருக்குபடி பார்த்துக் கொள்வேன். அதிக இடைவெளியில் பயிரை நடவு செய்தால்தான், நோய்த் தாக்குதல் குறைவாக இருக்கும். காற்றில் உள்ள சத்துகள் பயிர்களுக்கு அதிகமாக கிடைக்கும். இதனால், பயிர்களும் நல்ல ஆரோக்கியத்தோடு வளரும். அதேபோல, பயிர்களுக்கு வளர்ச்சியூக்கியாக தவறாமல் ஜீவாமிர்தம், பஞ்சகவ்யா போன்ற கரைசல்களையும் கொடுத்து வருகிறேன். பயிர்களில் கதிர் பூக்கும் சமயத்தில், நோய் தாக்குதல் வரக்கூடாது என்பதால் மீன் அமிலம் கொடுக்கிறேன். இந்த முறையில் விவசாயம் செய்வதால் சராசரியாக, 75 கிலோ அளவில் 25 மூட்டை நெல் கிடைக்கிறது. இந்த நெல்லை நான் வெளியில் விற்பது கிடையாது. எங்களது குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும் பகிர்ந்தளிக்கிறேன். என்னளவில் தற்சார்பு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். எனக்குத் தேவையானவற்றை நானே விவசாயம் செய்து உற்பத்தி செய்து சாப்பிடும்போது, மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது’’ என பேசி முடித்தார்.

தொடர்புக்கு:

கலைச்செல்வி: 93611 41947.

* இயற்கை விவசாயத்திற்கு அடிப்படைத் தேவையான மண்புழு உரத்தை கலைச்செல்வி தனது நிலத்திலேயே தயார் செய்கிறார். மாட்டுச்சாணம், பண்ணைக் கழிவுகள் போன்றவற்றை பதப்படுத்தி, அதில் மண்புழுக்களை விட்டு வளர்த்து வருகிறார். பின், அதை மண்புழு உரமாக மாற்றி பயிர்களுக்கு கொடுத்து வருகிறார்.

* பள்ளி ஆசிரியராக பணியாற்றி கலைச்செல்வி தற்போது இயற்கை விவசாய ஆசிரியராகவும் விளங்குகிறார். சேலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இயற்கை விவசாயம் சார்ந்து உழவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.