சம்பா, தாளடி நெற்பயிரில் ஆங்காங்கே குருத்து பூச்சி அதிக யூரியா, தழை சத்து உரம் போடக்கூடாது
*வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்
திருத்துறைப்பூண்டி : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தங்கபாண்டியன் கூறியிருப்பதாவது, திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் தற்போது பயிரிடப்பட்டுள்ள சம்பா மற்றும் தாளடி நெற்பயிரில் ஆங்காங்கே குருத்து பூச்சி தாக்குதல் காணப்படுகிறது.
இப்பூச்சி தாக்குதலின் அறிகுறியாக நெற்பயிரின் நடுக்குருத்து காய்ந்து வைக்கோல் போல் மாறி விழும், கையினால் நடுப்பகுதியை பிடித்து இழுத்தால் இலகுவாக வருவதுடன் தண்டின் அடிப்பகுதியில் குருத்துபுழு சாப்பிட்ட அறிகுறி காணப்படும்.
நெற்பயிர்கள் வளர்ச்சி அடைந்து நெல்மணிகள் உருவாகும் போது வெள்ளை கதிர்கள் ஒரு சில இடங்களில் உருவாகும். இப்பூச்சி தாக்குதலைக் கட்டுபடுத்த தேவைக்கு அதிகமாக யூரியா போன்ற தழைச்சத்து உரங்கள் இடுவதை குறைக்க வேண்டும். விளக்கு பொறி அமைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து கட்டுப்படுத்தலாம்.
பூச்சிதாக்குதல் ஆரம்ப நிலையில் இருந்தால் ஏக்கருக்கு 400மிலி குளோர்பைரிபாஸ் மருந்தினை 200லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். பூச்சி தாக்குதல் சற்று அதிகமாக காணப்பட்டால் கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50 சதவீதம் மருந்தினை ஏக்கருக்கு 400 கிராம் என்ற அளவில் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு அவர் கூறினார்.