Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

65 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ரூ.880 கோடியில் சேலம் ஜவுளி பூங்கா பணிகள் விரைவில் தொடங்கப்படும்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

சேலம்: சேலம் அஸ்தம்பட்டி பயணியர் மாளிகையில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தலின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து, கடந்த 2021 டிசம்பர் 11ம் தேதி நடந்த அரசு விழாவில், சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.

தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜவுளி பூங்காவிற்காக ஜாகீர் அம்மாபாளையத்தில் 119 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.880 கோடியில் அமைக்கப்பட உள்ள ஜவுளி பூங்காவிற்கான பணிகளை சிப்காட் நிறுவனம் மேற்கொள்கிறது. இதன் மூலம் நேரடியாக 15 ஆயிரம் பேரும், மறைமுகமாக 50 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பை பெறுவார்கள். குறிப்பாக, மகளிருக்கு 75 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

இந்த ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் டையிங், வார்பிங், ஆட்டோ லூம், கார்மென்ட்ஸ் உள்ளிட்ட உப தொழிற்கூடங்கள் அமைய உள்ளது. இந்த தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான சாலை, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் சிப்காட் மூலம் செய்து கொடுக்கப்படும்.

இதன் மூலம் சேலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு ஜவுளி ஏற்றுமதி நடைபெறும். இதற்கு ஏற்றார்போல் விமான நிலைய விரிவாக்க பணியும் நடந்து வருகிறது. மேலும், திருமணிமுத்தாற்றில் இருந்து சுமார் 20 லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து, இந்த ஜவுளி பூங்கா பணிகளுக்கு பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் திருமணிமுத்தாற்றில் சாய கழிவுகள் கலப்பது முற்றிலும் தடுக்கப்பட்டு, ஆற்று நீர் தூய்மையாகும்.

ஜவுளி பூங்கா மூலம் ஆண்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடிக்கு வர்த்தகம் நடைபெறும். விரைவில் இந்த பணிகள் தொடங்கப்பட்டு அடுத்த 2 ஆண்டில் ஜவுளி பூங்கா பயன்பாட்டிற்கு வரும்.

ஏற்கனவே சேலத்திற்கு டைடல் பார்க் திறக்கப்பட்டு, வெள்ளி தொழில் பன்மாடி கட்டிட பணிகள் நடந்து வரும் நிலையில், தற்போது அமைய உள்ள ஜவுளி பூங்காவும், இரும்பாலை போல் சேலத்தில் பிரபலமடையும். இவ்வாறு அவர் கூறினார்.