Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

1 ஏக்கரில் தினமும் ரூ.4 ஆயிரம்... செம்மையான லாபம் தரும் சேலத்து செவ்வரளி!

சேலத்தில் இருந்து நாமக்கல் செல்லும் சாலையில் எட்டு கி.மீ தொலைவில் இருக்கிறது பனமரத்துப்பட்டி கிராமம். சுமார் ஆயிரம் வீடுகளிருக்கும் இந்த கிராமத்தின் பிரதான விவசாயத்தொழில் செவ்வரளி சாகுபடிதான். எந்தப் பக்கம் திரும்பினாலும் செவ்வரளித் தோட்டமும், காலை மாலை என இரண்டு வேளைகளிலும் பூ பறிக்கும் ஆட்கள் கூட்டமும்தான் இவ்வூரில் நிறைந்திருக்கும். இத்தகைய கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக செவ்வரளி சாகுபடி செய்து வரும் விவசாயிகளுள் ஒருவரான ஆனந்த் என்பவரின் விவசாய முறை பற்றியும் செவ்வரளி சாகுபடியின் நுணுக்கங்கள் பற்றியும் தெரிந்துகொள்ள ஒரு காலைப்பொழுதில் பயணமானோம். செவ்வரளி பூ பறிப்பில் பிசியாக இருந்த போதிலும் எங்களுக்கும் நேரம் ஒதுக்கி பேசத்தொடங்கினார்.

``மாட்டிற்கு சோளத்தட்டை, வியாபாரத்திற்கு செவ்வரளி. இது இரண்டும்தான் எங்கள் ஊரின் பிரதான விவசாயம். சுமார் ஆயிரம் வீடுகள் இருக்கும் எங்கள் கிராமத்தில் பெரும்பாலானோருக்கு இதுதான் தொழில். நெல் சாகுபடியெல்லாம் மிகக்குறைவுதான். எனக்கு 45 வயதாகிறது. எனது அப்பா காலத்திலிருந்தே செவ்வரளி சாகுபடிதான். நான் படித்தது பத்தாவதுதான். படித்து முடித்தவுடன் அப்பாவுக்குத் துணையாக விவசாய வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். அதோடு ட்ராக்டர் ஓட்டி பழகுவதும் பிற வேலைக்குச் செல்வதுமாகத்தான் இருந்தேன். திருமணத்திற்கு பிறகு சொந்தமாக வேலை செய்யலாமென நினைத்து இந்த செவ்வரளி சாகுபடிக்குள் நுழைந்தேன். கடந்த 15 ஆண்டுகளாக இதுதான் எனது தொழில். நான், எனது மனைவி, எனது குடும்பம் என அனைவருக்கும் இதுதான் தொழில். பூக்கள் பறிப்பது, விற்பனைக்கு அனுப்புவது என காலை, மாலை இரண்டு வேளைகளிலும் வேலை இருந்தபடி இருக்கும்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்.

``எனக்குச் சொந்தமாக 1.5 ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அந்த ஒன்றரை ஏக்கரிலும் அரளியைத்தான் சாகுபடி செய்து வருகிறேன். செவ்வரளியைப் பொருத்தவரை பனிக்காலம், மழைக்காலத்தில் வரவு குறைவாக இருக்குமே தவிர, எல்லா சீசனிலுமே சாகுபடி கொடுத்தபடி இருக்கும். ஒருமுறை நடவு செய்தால் காலம் முழுவதும் சாகுபடி கொடுத்த வண்ணம் இருக்கும். ஆனால், செடி வளர வளர வேர் அதிகம் பிடிக்கும்போது மகசூல் குறைவாகிவிடும். அதனால், ஒருமுறை நடவு செய்து நான்கு வருடங்கள் வரை நல்ல மகசூல் எடுக்கலாம். அதன்பின், அந்தச் செடிகளை அகற்றிவிட்டு மீண்டும் பதியமிட்டு செடியை வளர்க்கலாம். இந்த செவ்வரளி பதியம் முறையில் வளர்த்தெடுத்து நடப்படுகிறது. நடுவதற்கு முன்பாக நிலத்தை பராமரிப்பது முக்கியமானது. அதாவது, செவ்வரளி சாகுபடி செய்ய தேர்ந்தெடுத்த நிலத்தை ஐந்து கலப்பை கொண்டு நன்கு ஆழமாக உழ வேண்டும். பின், நிலத்தை நன்கு காயப்போட வேண்டும். பின், மீண்டும் உழுது ரொட்டவேட்டர் மூலம் நிலத்தை சமன்செய்து செவ்வரளி பதியத்தை நடவு செய்யலாம்.

நடவு செய்யும்போது இரண்டு செடிக்கு இடைப்பட்ட அகலம் 12 அடியாகவும், நீளம் 4 அடியாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த முறையில் நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 400 செடிகள் நடலாம். இப்படி, நடுகிற செடிகள் மூன்று மாதத்தில் மகசூல் கொடுக்கத் தொடங்கிவிடும். இந்த மூன்று மாதங்களில் வாரம் ஒருமுறை தண்ணீர் கொடுத்தால் மட்டும் போதுமானது. பின், செடி வளர்ந்து மகசூல் கொடுக்கும்போது பத்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர்  கொடுத்தாலே போதுமானது. அதேபோல், மூன்று மாதத்தில் மகசூல் கொடுக்கிற செடிகள் ஆரம்பத்தில் ஏக்கருக்கு 10 கிலோ வீதம் மகசூல் கொடுக்கும். பின், ஒரு வருடம் நன்கு வளர்ந்தபிறகு முழுமையாக மகசூலைக் கொடுக்கும். ஒரு மாதத்தில் படிப்படியாக மகசூல் குறைந்து பின் மீண்டும் படிப்படியாக மகசூல் அதிகரிக்கும். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு ஏக்கரில் இருந்து 10 கிலோ முதல் 55 கிலோ வரை சாகுபடி எடுக்கலாம்.

இப்படி மகசூல் கொடுக்கிற செவ்வரளிக்கு பராமரிப்பு மிகக்குறைவு. அதாவது, ஆறு மாதத்திற்கு ஒருமுறை தொழு உரமும், மாதம் ஒருமுறை டிஏபி, காம்ப்ளக்ஸ், யூரியா இதுமட்டுமே கொடுத்தால் போதுமானது. அதேபோல, ஒரு வருடத்திற்குப் பிறகு செடியின் தூரில் வேர் பெருக்கம் ஏற்பட்டு பக்கச் செடிகள் முளைக்கத் தொடங்கும். அவை வளர்ந்தால் செடியின் மகசூல் குறையும் என்பதால் அந்தச் செடிகளையுமே வளர விடாமல் பறித்துவிட வேண்டும்.செவ்வரளிக்கு சீசனைப் பொருத்து விலை ஏற்ற இறக்கம் இருக்கும். திடீரென ஒரு கிலோ ரூ.400க்கும் போகும். விலை குறைந்தால் கிலோ ரூ.20க்கும் கூட வரும். தற்போது, ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனை ஆகிறது. நல்ல விலை இருக்கும்போது ஏக்கருக்கு 10 கிலோ பூ வந்தால் கூட 3 ஆயிரம், 4 ஆயிரம் வரை ஒரு நாள் வருமானம் பார்க்கலாம். எப்படிப் பார்த்தாலும், நஷ்டமாகாதபடி இதன் மகசூலும் விற்பனையும் இருக்கும். இந்த செவ்வரளிக்கு செலவெனப் பார்த்தால், பூ பறிக்க வரும் வேலை ஆட்களின் செலவுதான். ஆம். ஒரு கிலோ பூ பறிக்க ரூ.40 கூலியாகக் கொடுப்போம். அதுபோக, ஒரு ஏக்கருக்கு மாதம் ஆயிரம் செலவாகும். அவ்வளவுதான். இந்த செவ்வரளி சாகுபடிக்கு எந்த விதமான நுணுக்கங்களும் தேவையில்லை. தினசரி வருமானத்திற்கும் குறைந்தளவு பராமரிப்பிற்கும் தோதான மலர் சாகுபடி இது’’ என பேசி முடித்தார் ஆனந்த்.

தொடர்புக்கு:

ஆனந்த்: 99443 39395