சேலம்: சேலம் மத்திய சிறையில் கடந்த ஒருவார காலமாக தினந்தோறும் கைதிகளிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல நேற்றும் கைதியிடமிருந்து செல்போன் மற்றும் பேட்டரி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக நீதிமன்றத்திற்கு செல்லும் கைதிகளில் சிலர், சிறிய வகையான செல்போனை ஆசனவாய் வழியாக உள்ளே ஏற்றிக்கொண்டு சிறைக்குள் வருவார்கள். சோதனையை மீறி சிறைக்குள் சென்றதும், கழிவறைக்கு செல்லும் கைதிகள் அதனை மிகுந்த சிரமத்திற்கு இடையில் வெளியே எடுத்துக் கொண்டு பயன்படுத்துவார்கள்.
நேற்று முன்தினம் முபாரக் என்ற கைதியை போலீசார் சேலம் நீதிமன்றம் அழைத்து சென்றுவிட்டு, சிறைக்கு கொண்டு சென்றனர். பின்னர், அவரது அறையில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு செல்போனுக்கான ஒயர் கிடைத்தது. அப்படியானால் செல்போன் உள்ளே இருக்கும் என்ற சந்தேகம் வலுத்த நிலையில், அறை முழுவதும் நடத்திய சோதனையில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் முபாரக் ஆசனவாய் வழியாக 1 செல்போன், 1 பேட்டரியை வைத்திருந்ததை ஒப்புக்கொண்டு ஒப்படைத்தார். விசாரணையில், ‘நீதிமன்றத்திற்கு செல்லும்போது நண்பர்கள் மூலம் கிடைக்கும் செல்போனை ஆசனவாய் வழியாக உள்ளே ஏற்றிக்கொள்வேன். சிறைக்குள் வந்ததும் யாருக்காக கொண்டு வந்தேனோ அவர்களிடம் கொடுப்பேன்.
ஆனால் தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் பேசி முடித்ததும் மீண்டும் ஆசனவாய் வழியாக உள்ளே ஏற்றிகொள்வேன். இதற் காக அவர்கள் உதவி செய்வார்கள். ஆசனவாய் பகுதியை வாடகை குடோனாகவே பயன்படுத்தினேன்’ என்று திடுக்கிடும் வாக்குமூலம் அளித்தார். இச்சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
