Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடக்கம்!

சென்னை: தமிழ்நாட்டில் வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காய விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெங்காயத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரத்து குறைந்ததன் காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை கடைகளில் அதன் விலை ரூ.80-ஐ கடந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கிலிருந்து 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் தமிழ்நாடு அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம், கிலோ ரூ.35/-என்ற மானிய விலையில் தமிழ்நாடு முழுவதும் வெங்காயம் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தொடங்கப்பட்டது.

முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் உள்ள 8,739 நியாயவிலை கடைகள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள் மற்றும் அமுதம் அங்காடிகள் மூலம் இந்த விற்பனை நடைபெறுகிறது. இதன் மூலம் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்குக் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர்கள் வெங்கடரமணன் மற்றும் காந்திராஜ் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தனர்.