‘‘ஆரோக்கியமா இருக்கணும் என்பது எல்லோருக்கும் கனவுதான். ஆனால் அதற்கு முதலில் உடலுக்கு தேவையான சரியான ஊட்டச்சத்து கிடைக்குதா அப்படின்னு கேட்டா கேள்விக்குறிதான். எத்தனை பெண்கள் 35 வயது கடந்த பிறகும் கூட புரோட்டீன் முக்கியத்துவம் தெரியாமலே இருக்காங்க. இதற்கெல்லாம் சேர்த்து தான் என்னுடைய ப்ராடக்ட் இருக்கணும் அப்படின்னு முடிவு செய்தேன்” சொல்கிறார் நடிகை மற்றும் இளம் பெண் தொழில் முனைவோர் சாக்ஷி அகர்வால்.
வாட் நெக்ஸ்ட்... வரிசையா வெப் சீரீஸ், படங்கள் என பிஸி போலவே ?
தமிழ் வெப் சீரிஸ் ஒண்ணு படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாமே இப்போ முழுமையா முடிஞ்சிடுச்சு. சீக்கிரமே அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பாங்க. இது முழுக்க முழுக்க கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்குற ஒரு அருமையான கதையம்சம் உள்ள தொடர். இதுமட்டும் இல்லாம, மலையாளத்திலும் ஒரு புராஜெக்ட் வேலைகளை முடிச்சிட்டு இப்போ ரிலீஸுக்காக ரொம்ப ஆவலோடு காத்துட்டிருக்கோம். இது இல்லாம இன்னும் ரெண்டு புராஜெக்ட் இருக்கு. கூடிய சீக்கிரம் அறிவிப்புகள் வரும். அதில் ‘‘ த நைட்’’ புராஜெக்ட்க்கு நான் ஆவலா காத்திருக்கேன். முழுக்க முழுக்க என் மேல டிராவல் ஆகுற கதை’’.
ஏதாவது பிசியாக செய்திட்டே இருக்கீங்களே?
‘‘ எனக்கு சும்மா இருக்கப் பிடிக்காது. எதிர்காலத்துல சொந்தமா படம் தயாரிக்கணும்னு எனக்கு ரொம்ப நாளா பெரிய ஆசையே இருக்கு. தமிழ், மலையாளம்னு ரெண்டு மொழிகள்லயும் ஒரே நேரத்துல தரமான படங்களை தயாரிக்கிற திட்டமும் மனசுல இருக்கு. கண்டிப்பா 2030-க்குள்ள எப்படியாவது சினிமா தயாரிப்புத் துறையில நேரடியா களம் இறங்கிடனும்ங்கிறதுதான் என்னோட இப்போதைய முக்கியமான குறிக்கோள்.
சொந்தமா ஒரு பிராண்ட் தொடங்குறது, அதுவும் புரோட்டீன் பார் தயாரிப்புக்குள்ள இறங்குற ஐடியா எப்படி வந்துச்சு?
‘‘எந்த ஒரு பிசினஸ்லயும் சும்மா பணத்தை மட்டும் முதலீடு பண்ணிட்டு ஓரமா நிக்கிறதுல சுத்தமா விருப்பமில்லை. புதுசா ஒரு பொருளை சந்தைக்குக் கொண்டு வரும்போது அதுல நம்முடைய முழு உழைப்பு, சொந்த ஐடியா, அப்புறம் கொஞ்சம்ஆழமான ரிசர்ச் இருக்கணும்னு நினைப்பேன்.
இந்த புரோட்டீன் பாரை உருவாக்குறது சாதாரண விஷயமா இல்லை. கிட்டத்தட்ட 500க்கும் மேலான முறை விதவிதமா ட்ரையல்ஸ் பண்ணி, எத்தனையோ முறை சோதனையில் ரிஜெக்ட் ஆகி, கடைசியில லேப்ல இறங்கி ரொம்ப கஷ்டப்பட்டு ரிசர்ச் பண்ணிதான் இதை உருவாக்கினோம். கவர் மேல ‘No Added Sugar’ (சேர்க்கப்பட்ட சர்க்கரை இல்லை) அப்படின்னு சும்மா விளம்பரத்துக்காக எழுதாம, உண்மையிலேயே அதுல ‘Zero Sugar’ இருக்கணும்ங்கிறதுல ரொம்ப தெளிவா இருந்தேன். இதுக்காக செலவு அதிகமானாலும் பரவாயில்லைனு மாங்க் பழம் (‘Monk Fruit’) போன்ற விலை உயர்ந்த இயற்கை இனிப்புகளையே இதுல பயன்படுத்தினோம்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு எந்த வயசுல இருந்து நாம கவனம் செலுத்த ஆரம்பிக்கணும்?
பொதுவா 25 அல்லது 30 வயசுக்கு அப்புறம்தான் பல பேருக்கு ஆரோக்கியத்தை பத்தின விழிப்புணர்வே வருது. ஆனா என்னை பொறுத்தவரைக்கும் குழந்தை பருவத்துல (Childhood) இருந்தே சரியான ஊட்டச்சத்தை கொடுக்க ஆரம்பிக்கணும். உடம்புக்குத் தேவையான புரோட்டீன், நல்ல கொழுப்புச் சத்து (Good fat), நார்ச்சத்து, காய்கறிகள்னு எல்லாமே சின்ன வயசுல இருந்தே சாப்பாட்டுல இருக்கணும். நாம சாப்பிடுற உணவை சரியா கவனிச்சு சாப்டுறது வாழ்நாள் முழுக்கவே ரொம்ப முக்கியம். இப்போ ஸ்கூல்களிலும் ஸ்நேக்ஸ் பாக்ஸ், ஊட்டச்சத்து உணவு, நோ ஜங்க் இப்படி பார்க்க முடியுது வரவேற்கலாம். அதே சமயம் இந்த மாற்றம் எல்லாம் நிகழ்ந்தது நம்மை மாதிரி மில்லனியல்ஸ் செய்த மாற்றம்தான். நமக்கு 30 வயதுக்கப்பறம் வந்த தெளிவு காரணம் இன்னைக்கு நம்ம குழந்தைகளுக்கு இப்பவே ஸ்நேக்ஸ் , பழங்கள் இப்படி அக்கறை காட்டுறோம். ஆனால் இது போதாது’’.
உடம்பை ஃபிட்டா வச்சுக்குறதுக்கும் புரோட்டீன் உணவுகளுக்கும் என்ன தொடர்பு?
35 வயசுக்கு அப்புறம் கண்டிப்பா புரோட்டீன் ரொம்பவே அவசியம். நம்ம உடம்புல 9 அத்தியாவசிய அமினோ அமிலங்கள் இருக்கு. அதை நாம சாப்பிடுற சாப்பாடு மூலமா உடம்புக்குக் கொடுக்கலைனா, நம்ம உடம்பே தானா தன் சொந்த தசை, மூட்டுகள்ல இருக்கிற சத்துக்களை உறிஞ்ச ஆரம்பிச்சிடும். இதனாலதான் பிற்காலத்துல கடுமையான மூட்டு வலி, முடி கொட்டுறது, சருமப் பிரச்னைகள்லாம் வர ஆரம்பிக்குது. அதுமட்டுமில்லாம ஒரே நேரத்துல போதுமான அளவு புரோட்டீன் சாப்பிடும்போதுதான் உடம்புல லியூசைன் ஸ்விட்ச் (Leucine switch) என்கிற அதாவது செல்லுலார் நியூட்ரிஷனை சென்ஸ் செய்கிற மெக்கானிசம் ஆன் ஆகி, புரோட்டீன் சேர்க்கை (Protein synthesis) கரெக்டா நடக்கும். அதனால் வெறும் உடற்பயிற்சி மட்டுமே போதாது. கூடவே புரோட்டீன் அவசியம்’’.
ஃபிட்னஸுக்கு அப்புறம் உங்க சொந்த வாழ்க்கையில என்ன மாதிரி மாற்றங்கள் நடந்துருக்கு?
நான் ரொம்ப ஆக்டிவா ஃபீல் பண்றேன்! முன்னாடி எல்லாம் சாயங்காலம் 4 அல்லது 5 மணிக்கு உடம்பு அப்படியே எனர்ஜி சுத்தமா குறைஞ்சு சோர்ந்து போயிடும். காலையில பெட்ல இருந்து எந்திருக்கிறதுக்கே மனசு இருக்காது. ஆனா ஃபிட்னஸ்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சதுக்கப்புறம் அந்த எனர்ஜி கிராஷ் எல்லாமே நின்னு போச்சு. கரெக்டான நேரத்துக்கு தூக்கம் வருது, காலையில புத்துணர்ச்சியா எந்திருக்க முடியுது.நம்ம உடம்பில் இருக்கற கடிகாரம் (Circadian rhythm) தானாவே இயங்க ஆரம்பிச்சிடுது. இத்தனை மணிக்கு எழணும், இத்தனை மணிக்குத் தூங்கணும், சாப்பிடணும்ன்னு ஒரு ஆசை, எல்லாருக்கும் இருக்கும் இல்லையா, அதெல்லாம் நீங்க கஷ்டப்பட்டு முயற்சி செய்யாமலேயே நடக்கும். எனக்கும் அப்படித்தான் ஆரம்பிச்சது’’.
பொதுவா ஹெல்தி ஃபுட், ஃபிட்னஸ்னாலே ரொம்ப ‘காஸ்ட்லி’ என்ற எண்ணம் இருக்கே, அதை சாதாரண மக்கள் எப்படி பேலன்ஸ் பண்றது?
ஆரோக்கியம்ங்கிறது ஒரு முதலீடு நாம தங்கம் வாங்குறோம், வீடு வாங்குறோம்... இதெல்லாம் எதிர்காலத்துக்காக பண்ற முதலீடு. ஆனா இன்னைக்கு நம்ம உடம்பு ஆரோக்கியமா இருந்தாதான் நாளைக்கு நாம உழைச்சு சம்பாதிக்கவே முடியும். ஹாஸ்பிட்டல்ல படுத்துட்டு இருக்கும்போது நம்மகிட்ட எவ்ளோ சொத்து இருக்குனு யோசிக்க மாட்டோம், ‘‘உடம்பு சரியானா போதும்”னுதான் நினைப்போம். அதனால, ஆரோக்கியமான உணவிலும் உடம்பிலும் முதலீடு பண்றதுதான் புத்திசாலித்தனம்.
பெண்களுக்கு நீங்க சொல்ல விரும்புற செய்தி என்ன?
முதலில் உங்களை நீங்களே முழுமையா ஏத்துக்கோங்க. என்ன உடலமைப்பு, என்ன நிறம், என்ன உயரம் இருந்தாலும் உங்களை நினைச்சு நீங்க தாழ்வு மனப்பான்மை அடையவேக் கூடாது. ‘ஓகூ’ புரோட்டீன் பிராண்ட் பெயருக்கு ஜப்பானிய மொழியில ‘‘ஆற்றல் நமக்குள்ளேயே தான் இருக்கு”னு அர்த்தம். அதனால்தான் என்னுடைய புரோட்டீன் பாருக்கு அந்தப் பெயரை வைத்தேன். அந்த உள் வலிமையை உணருங்க. அடுத்தவங்க பாராட்டுக்காக காத்துட்டிருக்காம, உங்க சுய பராமரிப்புக்கு (Self-care) முதலிடம் கொடுங்க. குடும்பத்துல இருக்குற எல்லாரும் சாப்பிட்ட அப்புறம் மிச்சம் மீதி இருக்குறதை சாப்பிடுற பழக்கத்தை பெண்கள் முதலில் நிறுத்தணும். உங்க ஆரோக்கியத்துக்கு நீங்கதான் முதல் முன்னுரிமை தரணும். முக்கியம் 30 வயது நெருங்கினா உங்க கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து, இதெல்லாம் எவ்வளவு சாப்பிடுறோம். அதனால் என்ன விளைவுகள் நடக்குது இதெல்லாம் பாருங்க.உங்களை நீங்க லவ் பண்ணுங்க ’’.
- ஷாலினி நியூட்டன்



