Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

என் வீட்டுத் தோட்டத்தில் செடிகள் எல்லாம் பேசும் சொல்கிறார் அமிர்தா!

பத்துக்கு பத்து இடத்துல அஞ்சு செடி நடலாம், இவ 21 செடி நட்டு வச்சிருக்கா, கையக் கால கூட நீட்ட முடியலை”

“எல்லா செடியும் கத்தையா வாங்கினவ என்னைய மட்டும் ஒத்தையா வாங்கிட்டு வந்துட்டா. அஞ்சு அடிக்கு மேல வளர்ந்த அப்புறம்தான் இவ கண்டுபிடிச்சா , என்னால ஜோடியா இருந்தாத்தான் காய்க்க முடியும்ன்னு. இப்போ விதை வாங்கி போட்டு வெச்சிருக்கா... எப்படி 60 வயசையும் ஆறு மாச குழந்தையையும் சேர்த்து வைக்க முடியும்.”

இப்படி தக்காளிச் செடி, பீன்ஸ் செடி எல்லாம் நம் வீட்டுத் தோட்டத்தில் பேசினால் எப்படி இருக்கும். @amrirashitha இந்த இன்ஸ்டா அக்கவுண்ட்டை திறந்தாலே அங்கே இருக்கும் செடிகள் டப்பிங்கில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும். அப்படி ஒரு ஜாலியான டப்பிங் ரீல்ஸ்களுடன் வீட்டுத் தோட்டம் போட்டு வைத்து இருக்கிறார் அமிர்தா. அதுவும் இங்கே இல்லை. அமெரிக்காவில். இங்கிருக்கும் கால நிலைக்கும் அங்கிருக்கும் கால நிலைக்குமே நிறைய வேறுபாடுகள் உண்டு. இதற்கிடையில் வீட்டுத்தோட்டம் எப்படி சாத்தியமானது. செடிகளுக்கு நடுவே சிரித்தபடி நம்மிடம் பேசத் துவங்கினார் அமிர்தா.

உங்களைப் பற்றி?

நான் சென்னை பொண்ணு. பி.டெக், எம்.பி.ஏ படிச்சிருக்கேன். கணவர் ரஷீக் ஐடி துறையில் வேலையில் இருக்கார். எங்களுக்கு ரெண்டு குழந்தைகள். திருமணத்திற்குப் பிறகு அமெரிக்கா வந்து இப்போ 8 வருஷத்துக்கு மேல ஆச்சு.

தோட்டம் வளர்க்கணும்னு எப்படி தோணுச்சு? சின்ன வயசுல இருந்தே இந்த ஆர்வம் இருந்ததா?

சின்ன வயசுல எங்க அம்மா வீட்டில் நிறைய செடிகள், மரங்கள்லாம் இருக்கும். அப்போ நான் போய் பறிச்சு சாப்பிடுவேனே தவிர, தோட்டத்தில் வேலை எல்லாம் செய்ததில்லை. ஆனா நாமலே சுயமா காய்கறிகள் வளர்த்து, அதை பறிச்சு சமைக்கணும்னு சின்ன வயதில் இருந்து மனசுக்குள்ள பெரிய ஆசை இருந்தது. அமெரிக்கா வந்து சில வருடங்கள் அப்பார்ட்மென்ட்டில் இருந்ததால் எதுவும் பண்ண முடியலை. அப்புறம் இந்த வீட்டிக்கு மாறியதும் நல்ல ஸ்பேஸ் கிடைச்சது. உடனே களத்தில் இறங்கிட்டேன்!

அங்க காலநிலை (Weather) எப்படி இருக்கும்? அதுக்கேத்த மாதிரி தோட்டம் வளர்ப்பது சவாலா இல்லையா? கண்டிப்பா பெரிய சவால் தான்! இங்க வருடத்தின் பெரும் பகுதி குளிர்காலம் தான் இருக்கும். பனி கொட்டுற நேரத்துல வெளியில ஒரு செடி கூட வைக்க முடியாது, எல்லாமே உறைஞ்சு போயிடும். ஏன் நாமளே வீட்டை விட்டு வெளியே போக முடியாது.

அதனால மார்ச் மாசம் வசந்த காலம் (Spring) தொடங்கும் போது, வீட்டின் உள்ளேயே விதைகளை போட்டு வளர்க்க ஆரம்பிப்போம். ஏப்ரல், மே மாசத்துல பனி முற்றிலும் குறைந்ததும் செடிகளை வெளியில் மாத்திடுவோம். அப்புறம் சம்மர்ல நல்ல மழை பெய்யுறதால செடிகள் ரொம்ப வரண்டு போகாம நல்லா வளரும். இந்த சில மாதங்கள் மட்டுமே நாங்க முழுசா கார்டனிங் பண்ண முடியும்!

உங்க தோட்டத்தில் என்னென்ன செடிகள் எல்லாம் வச்சிருக்கீங்க?

“அது ஒரு பெரிய பட்டியலே இருக்கு! பீன்ஸ், அவரைக்காய், கத்திரிக்காய், வெள்ளரிக்காய், கேப்சிகம், வாழைமரம், ஸ்ட்ராபெர்ரி, கேண்டலூப் (மஸ்க்மெலன் வகை போன்ற பழம்) வச்சிருக்கேன். மூலிகைகள்ல புதினா வெரைட்டி, ஆரிகானோ, கிழங்குகளில் உருளைக்கிழங்கு இருக்கு. தக்காளி செடி மட்டுமே ஒரு 20லிருந்து 30 வச்சிருப்பேன்! அந்தச் செடிதான் உண்மையாவே திட்டினா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு ஒரு வீடியோ போட்டேன்”.

தோட்டத்தில் இருந்து எவ்வளவு மகசூல் கிடைக்குது?

நிறையவே கிடைக்கும்! பீன்ஸ் எல்லாம் வாரத்துக்கு 450 கிராம் அளவுக்குப் பறிப்பேன். வாரத்துல 3 நாள் பீன்ஸ் சமையல் தான். ஹஸ்பண்ட் “என்னது திரும்பவும் பீன்ஸா?”னு கேட்கிற அளவுக்கு ஆகிடும். அவரைக்காய் எல்லாம் கிலோ கணக்கில் காய்க்கும். பக்கத்து வீடு, ஃபிரெண்ட்ஸ், ஃபேமிலினு எல்லாருக்கும் கொடுப்பேன்.

உங்க தோட்டத்தில் எதை ரொம்ப மிஸ் பண்றீங்க?

நம்ம ஊர் மரங்கள், முருங்கைக்காய், முருங்கைக் கீரையை ரொம்ப மிஸ் பண்றேன். இங்க இருக்குற கடுங்குளிரில் அதையெல்லாம் வருஷம் முழுக்க காப்பாற்ற முடியாது. அதிலும் இங்கே பெரிய மரங்களே வைக்க முடியாது. காரணம் இங்க செடிகளுக்கு ஆயுட்காலமே சில மாதங்கள் தான். ஆனா ஸ்ட்ராபெர்ரி, ஆரிகானோ எல்லாம் அடுத்த சீசனுக்குத் தானாவே துளிர்த்து வந்துடும்.

செடிகள் பேசுற மாதிரி ரீல்ஸ் அந்த ஐடியா எப்படி வந்துச்சு?

(சிரித்துக்கொண்டே) உண்மை என்னன்னா... நான் நிஜமாவே தோட்டத்துக்குள்ள போய் செடிகள் கூட பேசுவேங்க! தப்பித்தவறி ஏதாச்சு கிளையை உடைச்சிட்டா “அய்யோ ஸாரிப்பா”னு கேட்பேன். என் பசங்க கூட “எங்களை விட செடியை தான் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்”னு பொறாமைப்படுவாங்க. செடிகளை நான் செல்லப் பிராணி (Pet) மாதிரி தான் பார்ப்பேன்.

ரீல்ஸ் உருவாக்குற பிராசஸ் கொஞ்சம் சொல்லுங்களேன்?

தோட்டத்தில் நடக்குற விஷயங்களை அப்படியே கவனிப்பேன். உதாரணத்துக்கு, “தக்காளி செடி நெருக்கடியா இருக்கு”னா, அது பேசுனா எப்படி இருக்கும்னு யோசிச்சு நகைச்சுவையா டயலாக் எழுதுவேன். அப்புறம் AI வாய்ஸ் மேக்கர் மூலமா வாய்ஸ் கொடுத்து எடிட் பண்ணி ரீல்ஸா போடுவேன். நிறைய பேருக்கு இந்த ஹ்யூமர் ரொம்ப பிடிச்சிருக்கு!

கடைசியா உங்க பேசும் செடிகளின் ரீல்ஸின் நோக்கம் என்ன?

எல்லாரும் ஸ்ட்ரெஸ்ஃபுல்லான லைஃப்ல இருக்கும்போது, இந்த வீடியோக்கள் அவங்களுக்கு ஒரு சின்ன சிரிப்பையும் மகிழ்ச்சியையும் தரணும், அவ்வளவுதான் என்னோட நோக்கம்! மேலும் எல்லோருடைய வேலையும் ஏதோ வகையில் நெருக்கடிக் கொடுக்கும், அதற்குள் நம்மால் என்ன நமக்கு ஜாலியான மொமென்ட்ஸ் கொடுக்க முடியுமோ அதை சேர்த்து செய்தா வேலை கஷ்டமா இருக்காது.

- ஷாலினி நியூட்டன்