சபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை: பக்தர்கள் குவிகின்றனர்
மகரஜோதியை தரிசிப்பதற்காக பக்தர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்தே பாண்டித்தாவளம் அப்பாச்சி மேடு, சரங்குத்தி உள்பட பல்வேறு இடங்களில் குடில்கள் கட்டி தங்கியுள்ளனர். மகரஜோதியை முன்னிட்டு நெரிசல் ஏற்படாமல் இருக்க பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இன்றும், நாளையும் ஆன்லைன் மற்றும் உடனடி முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
நாளை காலை 7.30 மணி முதல் நிலக்கல்லில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காலை 10 மணி வரை மட்டுமே நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். நாளை மதியம் 12 மணி வரை மட்டுமே பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மாலை 5.30 மணிக்கு திருவாபரணம் சரங்குத்தியை அடைந்த பின்னரே பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
நாளை மதியம் உச்சிகால பூஜை முடிந்து நடை சாத்தப்பட்ட பின்னர் 18ம் படி ஏற அனுமதி இல்லை. திருவாபரணம் அணிவித்து தீபாராதனை நடத்தப்பட்டு மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னர் மட்டுமே பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் நாளை மதியத்திற்கு பின்னர் கோயில் வளாகத்தில் சிறப்பு பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். நாளை மாலை புல்மேட்டில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னர் புல்மேட்டில் உள்ளவர்கள் சத்ரம் பகுதிக்கு திரும்பி விடவேண்டும். மறுநாள் (15ம் தேதி) காலை முதல் மட்டுமே புல்மேட்டில் இருந்து சன்னிதானம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னர் புல்மேட்டில் இருந்து சன்னிதான ம் செல்பவர்களை தடுக்க அப்பகுதியில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மகரஜோதி தரிசிக்க அனுமதி அளிக்கப்படும். மரங்களின் மீது ஏறவோ, உயரமான இடங்களுக்கு செல்லவோ அனுமதி கிடையாது. பக்தர்கள் தங்கியுள்ள குடில்களில் சமையல் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
பம்பை, நிலக்கல் உள்பட பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னர் பக்தர்கள் திரும்புவதற்கு கேரள அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.