திருவனந்தபுரம்: சபரிமலை நேற்று இரவு கேரள அரசு பஸ்சில் திடீரென தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் மயிரிழையில் உயிர் தப்பினர். சபரிமலையில் நிலக்கல்-பம்பை இடையே 24 மணிநேரமும் கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்திவிட்டு இந்த பஸ்களில் தான் பக்தர்கள் பம்பை சென்று திரும்ப வேண்டும். நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தரிசனம் முடிந்த பக்தர்கள் பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு கேரள அரசு பஸ்சில் புறப்பட்டனர். இந்த பஸ்சில் 50க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
அட்டத்தோடு பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் பின்புற டயரில் தீப்பிடித்தது. அதைப் பார்த்த பக்தர்கள் அலறினர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். உடனடியாக பக்தர்கள் அனைவரும் பஸ்சிலிருந்து இறங்கி ஓடினர். நிமிட நேரத்தில் பஸ்சின் பின்புறம் முழுவதும் எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவ விடாமல் அணைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு வேறு ஒரு பஸ்சில் பக்தர்கள் அனைவரும் நிலக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

