Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் கேரள சட்டசபையில் கடும் அமளி: சபாநாயகர் இருக்கையை நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாய்ந்ததால் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை நேற்று காலை கேள்வி நேரத்துடன் தொடங்கியது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன், சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை முடக்க முதல்வர் அலுவலகம் முயற்சித்து வருகிறது.

இதைக் கண்டித்து 2 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டசபை முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். சபை நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஒத்துழைக்க மாட்டோம் என்று கூறினார். தொடர்ந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து பேனர்களை கையில் ஏந்தி கடும் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் சபாநாயகர் ஷம்சீரின் இருக்கைக்கு அருகே வந்து பேனரால் அவரை மறைத்து நின்று கோஷமிட்டனர்.

இந்த அமளிக்கு இடையேயும் கேள்வி நேரத்தை தொடர சபாநாயகர் ஷம்சீர் அனுமதித்தார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அன்வர் சாதத், முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்த இப்ராகிம் குட்டி ஆகியோர் சபாநாயகரின் இருக்கையை நோக்கி பாய்ந்தனர். உடனடியாக சபை காவலர்கள் இருவரையும் தடுத்தனர். இதனால் சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சபாநாயகர் ஷம்சீர் இருக்கையை விட்டு எழுந்து சென்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அவைக்கு வந்தார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது முதல்வர் பினராயி விஜயன் எழுந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கம்பால் சபை காவலர்களை தாக்கினர் என்றும், அதை சபாநாயகர் கவனிக்கவில்லை என்றும் கூறினார். சபாநாயகர் ஷம்சீர் , எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேனர்களால் என்னுடைய இருப்பிடத்தை மறைத்து என்னை குருடனைப் போல ஆக்கிவிட்டனர் என்றார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதை தொடர்ந்து சபையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஷம்சீர் அறிவித்தார். இதற்கிடையே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.