இந்தியாவுடனான மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ரஷ்யா தயார்: கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் பேட்டி
புதுடெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகமான வரி விதித்துள்ளார். இந்த சூழலில், ரஜ்ய அதிபர் விளாடிமிர் புடின் நாளை மற்றும் நாளை மறுதினம் 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். இதில் பிரதமர் மோடியுடன் அவர் இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச உள்ளார்.
புடினின் இந்த பயணத்தை முன்னிட்டு, ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இந்திய பத்திரிகையாளர்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று சந்தித்து பேசினார். அப்போது டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: இந்தியா-ரஷ்யா இடையே மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை இருப்பதை ஒப்புக் கொள்கிறோம். ரஷ்யாவிலிருந்து 64 பில்லியன் டாலர் பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், இந்தியாவில் இருந்து 5 பில்லியன் டாலர் பொருட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுதொடர்பான இந்தியாவின் கவலைகளை நாங்கள் உணர்கிறோம். இந்த இடைவெளியை குறைக்க ரஷ்ய தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் அதிக வணிகம் மேற்கொள்ள ‘இறக்குமதியாளர்கள் மன்றம்’ நடத்தப்படும். இந்திய தயாரிப்புகளுக்கான சந்தை அணுகலை அதிகரிக்க ரஷ்யா சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
* டெல்லியில் உச்சகட்ட அலர்ட்
ரஷ்ய அதிபர் புடின் வருகையையொட்டி டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடந்த நிலையில், அதிபர் புடின் தங்கும் இடம், பயணிக்கும் பாதை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன. டிரோன், சிசிடிவி கேமரா மூலமாகவும் 24 மணி நேரமும் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையே, புடினின் பயணத்திற்கு முன்பாக இந்தியா உடனான முக்கிய ராணுவ ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றம் அனுமதி அளித்துள்ளது. இரு அரசுகள் இடையே கடந்த பிப்ரவரி 18ல் கையெழுத்தான பரஸ்பர தளவாட ஆதரவு பரிமாற்றம் ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான ஸ்டேட் டுமா ஒப்புதல் தந்துள்ளது.

