கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு முதல் போர் தொடுத்து வரும் நிலையில், அந்நாட்டின் பல்வேறு நகரங்களை குறிவைத்து தீவிர வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த சூழலில், உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் பகுதியில் உள்ள மைலா கிராமத்தில் உக்ரைன் ராணுவத்துக்கு சொந்தமான டிரோன் உதிரிபாகங்கள், கண்ணிவெடிகள் மற்றும் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கிடங்கின் மீது நேற்று முன்தினம் நள்ளிரவு ரஷ்யா திடீர் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஆயுதக் கிடங்கில் இருந்த வெடிபொருட்கள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதால் அப்பகுதி முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்த தீயில் கருகியது. ராணுவ கிடங்கு குடியிருப்பு பகுதிக்கு மிக அருகில் அமைந்திருந்ததால், வெடிவிபத்தின் கோரத் தாண்டவத்தால் அருகிலிருந்த முதியோர் இல்லம் மற்றும் 50 குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 34 முதியவர்கள் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்ட கிராம தலைவர் உட்பட 37 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்; மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் 370 பேர் உடனடியாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.



