தடை இருந்தாலும் தீராத பதவி மோகம்; 2028 அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டி: டிரம்பின் முரண்பட்ட பேச்சு, ஆசையால் சர்ச்சை
வாஷிங்டன்: அமெரிக்காவில் அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அமெரிக்காவில் புகழ் பெற்ற தொழிலதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் முதன்முறையாக 2016ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போடடியிட்டு வெற்றி பெற்று, 2017ம் ஆண்டு நாட்டின் 45வது அதிபராக பதவி ஏற்றார். பின்னர், 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனிடம் டிரம்ப் தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து 2024ம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்ற டிரம்ப், 2025ம் ஆண்டு அமெரிக்காவின் 47வது அதிபராக பதவி ஏற்றார்.
அமெரிக்க அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டப்படி, ஒரு நபர் இரண்டு முறைக்கு மேல் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்பதால், 2028ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட முடியாது. இந்த சூழலில், 2028 அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டி வரும் டிரம்ப், முரண்பட்ட கருத்துகளையும் பேசி வருகிறார். இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு, “2028 அதிபர் தேர்தலில் போட்டியிட ஆர்வம்தான். ஆனால், அரசியலமைப்பில் அதற்கு தடை உள்ளது” என பதில் தெரிவித்திருந்தார். பென்சில்வேனியாவில் சில தினங்களுக்கு நடந்த பொது கூட்டம் ஒன்றில் பேசிய டிரம்ப், அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வாகும் நபர், அவர் தன்னைத்தான் அமெரிக்காவின் மிகச்சிறந்த அதிபர் என சொல்லி கொள்வார்.
அப்போது நான் வீட்டில் இருந்து கொண்டு, என்ன இது அவர் இப்படி சொல்கிறாரே என்று யோசித்து கொண்டிருப்பேன்” என தெரிவித்திருந்தார். இதேபோல் ஜார்ஜியாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், “2029ம் ஆண்டு அதிபர் பதவி முடிந்ததும், வீட்டில் அமர்ந்திருப்பேன். அப்போது நான் கண்ணீர் சிந்தவும் கூடும்” என வேதனையை வௌிப்படுத்தி இருந்தார். பின்னர் மிக்சிகனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இன்னும் இரண்டரை ஆண்டுகளில் உங்களுக்கு வேறுஒரு அதிபர் கிடைக்கலாம். அப்போது நான் வீட்டில் அமர்ந்து கொண்டு செய்தி தாள்களை படித்து கொண்டிருப்பேன்.
தொலைக்காட்சியில், கடந்த முறை இருந்ததுபோல யாராவது ஒரு முட்டாள் அதிபர் நின்று கொண்டு, நாங்கள் சாதனை அளவிலான வணிகத்தை செய்கிறோம் என பேசுவதை கேட்டு கொண்டிருப்பேன்” என ஜோ பைடனை விமர்சிக்கும் விதமாக குறிப்பிட்டிருந்தார். இப்படி பேசி வந்த டிரம்ப், அண்மையில் தன் சமூக ஊடக தளத்தில் டிரம்ப் 2028 என்று பொறிக்கப்பட்ட தொப்பி படத்துடன், “நாங்கள் வெற்றி பெற போகிறோம்” என்ற வாசகங்களையும் பதிவிட்டுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை மீறி 3ம் முறை அதிபர் தேர்தலில் போட்டியிட டிரம்ப் சூசகமாக விருப்பம் தெரிவித்திருப்பது சர்ச்சைகளையும், விவாதங்களையும் எழுப்பி உள்ளது.



