Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வதந்தி 2!

2022ஆம் ஆண்டு வெளியான ‘வதந்தி’ இணையத் தொடருக்குப் பிறகு, முற்றிலும் புதிய கதைக்களத்துடன் வந்திருக்கிறது ‘வதந்தி 2'. முதல் சீசன் ஒரு பெண்ணின் இறந்த உடலை சுற்றி நடக்கும் கதைக்களமாக நகரும். இந்தக் கதை கிடைக்கும் ஒரு பெண் எலும்புக் கூட்டை சுற்றி உருவாக்கப்பட்டிருக்கிறது. புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில், ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தத் தொடரில் சசிகுமார் மூஸா ராஜா என்ற காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். அனாகா, அபர்ணா தாஸ், ரேவதி, விவேக் பிரசன்னா, யஷ்வந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு சிறிய காவல் நிலையம். குறைந்த எண்ணிக்கையிலான காவலர்கள், வசதிகள் குறைந்த பணிச்சூழல், பெரிய அதிகாரிகளின் உதவி கிடைக்காத நிலை என அந்த உலகமே மிகவும் இயல்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அங்கே தண்டனை மாற்றலாக வந்து பணியாற்றும் மூஸா ராஜாவின் வாழ்க்கைக்குள் எதிர்பாராத ஒரு வழக்கு வருகிறது.

அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுகிறது. அதற்காக மண் தோண்டப்படும் போது, மனித எலும்புக்கூடு ஒன்று கிடைக்கிறது. அந்த எலும்புக்கூடு யாருடையது? அது அங்கே எப்படி வந்தது? அதன் பின்னால் இருக்கும் மர்மம் என்ன? என விசாரணை தொடங்குகிறது.

ஆனால், இது வெறும் ஒரு கொலை வழக்கைக் கண்டுபிடிக்கும் காவல் விசாரணையாக மட்டும் நின்றுவிடவில்லை. அந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை, உறவுகள், ஆசைகள், பயங்கள், மறைக்கப்பட்ட உண்மைகள் என கதை மெல்ல விரிகிறது.

அதிலும் குறிப்பாக, பெண் கதாபாத்திரங்களைச் சுற்றி கதை உருவாக்கும் உணர்வுகள் கவனிக்கத்தக்கவை. பெண் குழந்தை பிறப்பது என்பது ஒரு குடும்பத்திற்கு மகிழ்ச்சியான நிகழ்வு என்றாலும், இன்னும் பல இடங்களில் பெண் குழந்தையைப் பற்றிய பார்வை முழுமையாக மாறவில்லை. மேலும் ஒரு பெண் யாரைக் காதலிக்க வேண்டும், யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பது கூட பெற்றோர்கள் முடிவு செய்தால் பரவாயில்லை. சுற்றி இருக்கும் சமூகம் ஒரு கட்டமைப்பை உருவாக்கி வைத்திருப்பதுதான் இன்னும் வருத்தம்.

இதில் பெண்களுக்கான பாதுகாப்புக் குறித்த கேள்வி இன்னும் பலாயிரம் வருடங்களாகக் கேட்டுக் கொண்டு மட்டும்தான் இருக்கிறோம். அதையும் இந்த ‘‘வதந்தி 2’’ தொடர் எடுத்து வைத்திருக்கிறது. இன்னும் சுதந்திரமாக தன் வாழ்க்கைக் குறித்தே முடிவு எடுக்க முடியாத நிலையில் ஹார்மோன் சார்ந்த விருப்ப மாற்றங்கள், அதற்காக சமூகம் கொடுக்கும் தொல்லைகள், கட்டுப்பாடுகள் என இதெல்லாம் எப்படி வகுப்பெடுப்பது. இதெல்லாம் என்ன என்றே தெரியாத கிராமப்புற மக்களுக்கு எப்படி விழிப்பு உணர்வைக் கொடுப்பது என எல்லா வகையான பெண் பிரச்னைகளையும் நெருடாத காட்சிகளாக எடுத்து வைத்திருக்கிறது.

பெண் குழந்தை குறித்த சமூகப் பார்வையைப் பேசும்போது, பெண்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மற்றொரு முக்கியமான விஷயத்தையும் இந்தத் தொடர் நினைவுபடுத்துகிறது. ஒரு பெண்ணின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு அவளோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அது அவளுடைய குடும்பத்தையும், குழந்தைகளையும், அடுத்த தலைமுறையையும் கூட பாதிக்கிறது.

நாம் ஒருவர் குறித்து வதந்தி பேசுகிறோம், அவரை தவறாக சித்தரிக்கிறோம் என்கிற போதிய புரிதல் கூட இல்லாமல் தினந்தோறுமான வாழ்க்கையிலேயே நாம் ஒவ்வொருவரும் யாரையோ குறித்து எங்கேயோ பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். அதை மாற்றினாலே பல பெண்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்.

அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ விட்டாலே போதுமானது. ஆனால் அந்த நிலை இல்லை என்பதாலேயே இறுதியில் தன் கையில் இருக்கும் பெண் குழந்தை வரமா ? சாபமா? என்கிற மனநிலையில் உடைந்து அழும் சசிகுமார் பெண்களைப் பெற்ற அத்தனைப் பெற்றோர்களின் அடையாளமாகத் தெரிகிறார். அவர் மட்டுமல்ல இன்று உலகமே அப்படித்தான்.

பெண் குழந்தை வரமா? சாபமா? என ஒவ்வொரு நிமிடமும் பாதுகாப்புக் குறித்த கேள்வியுடன் தான் கடக்க வேண்டியிருக்கிறது என்கிற உண்மையை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது ‘‘வதந்தி 2’’.