Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வதந்தியா, உண்மையா?

5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் இறுதியாக மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் இன்றுடன் முடிகிறது. இன்று மாலை அல்லது நாளை பெட்ரோல், டீசல் விலை அதிக அளவு உயரப்போவதாக பரவும் தகவல்கள் திடுக்கிட வைத்துள்ளன. ஈரான் போருக்கு பிறகு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி இன்னும் தீரவில்லை என்பதையே இந்த தகவல்கள் காட்டுகின்றன. போதுமான கையிருப்பு உள்ளது, மக்கள் பீதி அடைய வேண்டாம், வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று ஒன்றிய அரசு தரப்பில் விளக்கம் அளித்தாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளத்தயாரில்லை. ஏனெனில் கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள் அப்படி.

2014ல் மோடி பிரதமராக பதவி ஏற்ற போது கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்து விட்டது. அதற்கு முன்பு மன்மோகன்சிங் ஆட்சியில் பேரல் 140 டாலராக இருந்த கச்சா எண்ணெய், மோடி ஆட்சியில் 40 டாலராக சரிந்தது. ஆனாலும் மோடி விலையை குறைக்கவில்லை. அதற்கு பதில் வரியை உயர்த்தினார். அதோடு பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தினார். பெட்ரோல் மீதான வரியை 96 சதவீதமும், டீசல் மீதான வரியை 94 சதவீதமும் உயர்த்தியது மோடி அரசு. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.46 ஆக இருந்த வரி தற்போது ரூ.32.90ஆக உள்ளது.

அதே போல் 2014ல் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.3.56ஆக இருந்த வரி தற்போது 31.80ஆக உள்ளது. இந்த காலகட்டத்தில் 21 முறை வரி மாற்றப்பட்டுள்ளது. இதில் 12 முறை வரி ஏற்றப்பட்டுள்ளது. இதனால் 2014ல் இருந்து தற்போது வரை பெட்ரோல், டீசல் விற்பனை மூலம் ரூ.43 லட்சம் கோடி வருவாய் பெறப்பட்டுள்ளது. அரசுக்கு இந்த அளவுக்கு வருவாய் குவிந்தும், இப்போது வரை மக்கள் ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு அதிக அளவு விலை கொடுத்து வருகிறார்கள்.

ஈரான் போரால் கச்சா எண்ணெய் விலை தற்போது ஒரு பேரல் 120 டாலரை எட்டியுள்ளது. அப்படி இருந்தாலும் மன்மோகன் ஆட்சியை விட 20 டாலர் குறைவு தான்.

இருப்பினும் கடந்த மார்ச் மாதம் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.928.50 ஆகவும், வணிக சிலிண்டர் விலை ரூ.2,246 ஆக அதிகரித்துள்ளது. அதோடு நகரங்களில் இரண்டு சிலிண்டர் முன்பதிவுகளுக்கு இடையே 25 நாட்களும், கிராமங்களில் 45 நாட்களும் இடைவெளி இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே1ஆம் தேதி முதல் சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோகத்தில், கள்ளச்சந்தையைத் தடுக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் சில புதிய கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன.

இதன் அடுத்த கட்டமாக இன்று மேற்குவங்க வாக்குப்பதிவு முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 முதல் ரூ.25 வரை உயர்த்தப்படலாம் என்று பரவும் தகவல் நாடு முழுவதும் அதிக கொள்முதலுக்கு வழிவகுத்து உள்ளது. ஆந்திராவில் இந்த பீதியால் பெட்ரோல் பங்குகளில் மக்கள் முற்றுகையிட்டு கேன்களிலும் பிடித்துச்சென்றுவிட்டனர். ஒன்றிய அரசு எவ்வளவு தான் விளக்கம் அளித்தாலும் மக்கள் அதை ஏற்க தயாராக இல்லை. பெட்ரோல், டீசல் விலை உயருமா இல்லையா என்பது எப்படியும் இன்னும் ஒருசில தினங்களில் தெரிந்து விடும்.