மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் ஜெயலலிதா வழங்கிய 13.5 கிலோ எடையுள்ள தங்கக்கவசம் குருபூஜை விழாவில் அணிவிக்கப்படும். அதன்படி மதுரை அண்ணாநகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ள தங்கக்கவசத்தை, அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவர் நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் ஆகியோர் கையெழுத்திட்டு நேற்று பெற்றனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் பசும்பொன்னிற்கு தங்கக்கவசம் கொண்டு செல்லப்பட்டு தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டது.
இதில் பங்கேற்ற திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டி: செஞ்சியில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்நாடு அரசு, போலீசார் செயல்பாடுகள் சரியில்லை. முதலமைச்சர் எதை பற்றியும் வாய் திறப்பதில்லை. தவெக ஆட்சியில் அசுர வேகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரங்கள், லஞ்சம் பெறுவது அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வு விண்ணைத்தொடுகிறது. நடிகர் தனுஷை பார்த்து ஆளுங்கட்சி பதட்டமடைகிறது. நடிகராக இந்த ஆட்சியை தன்னிடம் கொடுத்திருக்கிறார்கள். அடுத்து நடிகரான தனுஷிடம் கொடுத்து விடுவார்களோ என்று பதற்றமடைகின்றனர்.
அமைச்சர் நிர்மல்குமார் அதிமுக இருக்காது என்கிறார். அவரது கண்ணில் கோளாறு உள்ளது. பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்பு போல நிர்மல்குமார் உள்ளார். காலம் இவருக்கு பதில் சொல்லும். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட தவெகவிற்கு சென்றவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. ஒரு கட்சியில் ஒரு பொதுச்செயலாளர், 2 துணைப் பொதுச்செயலாளர்கள் இருப்பார்கள். ஆனால் தவெகவில் 110 பேர் உள்ளனர்.
தனுஷிற்கு பின்னால், தூண்டுதலில் பாஜ இருப்பதாக தவெக அமைச்சர் பேசுகிறார். இருந்தால் என்ன? அவர் இஷ்டம். என்ன தவறு? நாங்களே பாஜவுடன்தான் கூட்டணி வைத்துள்ளோம். விஜய் அரசு இந்த 6 மாதத்தை தாண்டட்டும். அப்புறம் பார்க்கலாம். ஏதோ அதிர்ஷ்டத்தில் அவர் வந்துவிட்டார். தவெகவை ஆதரித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போதைய ஆட்சி குறித்து விமர்சித்துப் பேசுவது நியாயமானது. நாங்கள் வரவேற்கிறோம், தில்லாக ஆம்பளைகள் போல பேசுகின்றனர். ஆனாலும் அதற்கு பின்னாலும் ஆதரிப்பது ஏன்? சண்முகமும், வீரபாண்டியனும் சிந்திக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.


