Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆளுங்கட்சியை விமர்சிக்கும்போது கண்ணியத்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும்: சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை: ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணியத்துடனும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், முதல்வரை கடுமையாக விமர்சித்து பேசினார்.

இதையடுத்து, சி.வி.சண்முகத்தின் இந்த பேச்சு, முதலமைச்சரின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமை தான் என்று போதும் அதில் கண்ணியம் தேவை.

பேசும்போது எச்சரிக்கையுடன், கண்ணியத்துடன் பேச வேண்டும். தேர்தலின் போது வாக்குறுதிகளை கொடுப்பது உலக அளவில் உள்ள நடைமுறை தான். வாக்குறுதிகளை நிறைவேற்றாதை சுட்டிக்காட்டலாம். மனுதாரர் சி.வி. சண்முகம் சாதாரண நபர் அல்ல, சட்டம் படித்தவர், முன்னாள் அமைச்சர். அவர் இவ்வாறு பேசக்கூடாது. பொறுப்போடு பேச வேண்டும். அந்த காலம் போல் இப்போது இல்லை, அடுத்த தலைமுறையினர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தலைமுறை மாறிவிட்டது, நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை என்று குறிப்பிட்டார். இதையடுத்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் இதுபோல பேசுவது முதன்முறை அல்ல. அவர் மீது இதே போன்று மூன்று வழக்குகள் உள்ளன. அது சம்பந்தமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். இதையடுத்து, அனைத்து வழக்குகளையும் சேர்த்து விசாரித்து உத்தரவு பிறப்பிப்பதாக குறிப்பிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 22ம் தேதி தள்ளி வைத்தார்.