Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆளுங்கட்சியில் இணையும் இலை கட்சி மாஜி பெண் மந்திரி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘மலராத தேசிய கட்சியில் அல்வா ஊரின் எம்எல்ஏ கை ஓங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொண்டாடுறாங்களாமே...’’ என்று குதிரை சவாரி செய்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘அல்வா ஊரின் எம்எல்ஏ ஒரு காலத்தில் இலைக்கட்சியில் விஐபியாக வலம் வந்தவரு.. மம்மி மறைவுக்கு பிறகு தேசிய கட்சியில் சேர்ந்தாலும் அதிகபட்சம் எம்எல்ஏ ஆகத் தான் முடிந்தது. அதற்காக 2019, 2024 மக்களவை தேர்தல்களிலும் குதித்துப் பார்த்தாரு.. கனவு நிறைவேறவில்லை..

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பிரிந்த இலை கட்சியுடன் கூட்டணி சேர மலையான தலைவரை நீக்க வேண்டும்னு இலைக்கட்சியின் சேலம்காரர் மலராத தேசிய கட்சியின் நம்பர் 2 ஆனவரிடம் கோரிக்கை வைத்தார். காக்கை உட்கார பணம் பழம் விழுந்த கதையாக, தான் எந்த கட்சியில் இருந்து வந்தோமோ, அவர் மூலமாகவே மலையான தலைவரை வீழ்த்தினார் அல்வா ஊரின் எம்எல்ஏ. அதற்கு பின்னர் மாநில தலைவர் பதவியையும் பிடித்து விட்டார்.

எனினும் மலையான தலைவர் தனி அறிக்கை, தனி எக்ஸ் தள பதிவு என அவரது ஸ்டைலில் வலம் வந்து அல்வா ஊரின் எம்எல்ஏக்கு குடைச்சல் கொடுத்தார். இதனால் இருவருக்கும் மோதல், முட்டல் எனக் கழிந்தது. இந்நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒரு சில தொகுதிகளுக்கு மட்டுமே மலையான தலைவரை பொறுப்பாளராக போட்டு காய் நகர்த்தினார் அல்வா ஊரின் எம்எல்ஏ. சட்டி சுட்டதடா, கை விட்டதடா என்பது போல மாநில தலைவராக இருந்த தன்னை ஒரு சில தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் பொறுப்பாளராக நியமித்ததால் அதிருப்தி அடைந்த மலையான முன்னாள் தலைவர் அந்த பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார்.

மலைக்கு தகுதி அவ்வளவுதான் என காட்டியாச்சு என கொக்கரிக்கும் தலையின் ஆதரவாளர்கள், தேசிய கட்சியில் அல்வா ஊரின் எம்எல்ஏ கை ஓங்கியுள்ளதாக பட்டாசு போடாதது மட்டும்தான் குறையாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மந்த குப்பத்தில் போலி சரக்கு விற்பனை கொடி கட்டி பறக்குதாமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடல் ஊர் மாவட்டத்தில் மந்தாரமான குப்பம் உள்ளதாம். இங்குள்ள முக்கிய சந்திப்புகளில் போலி மது பாட்டில்களும், யூனியன் கடத்தல் சரக்குகள் ஜரூராகவும் விற்கப்படுகிறதாம். காலை துவங்கி நள்ளிரவு வரை நடக்கும் இந்த சட்ட விரோத மது விற்பனையை மாமூல் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்வதே இல்லையாம்.

மந்தாரமான குப்பத்தில் டாஸ்மாக் கடை இல்லாததை பயன்படுத்தி ஒரு சமூக கும்பல் பைக்கில் போலி சரக்குகளை கடத்தி விற்று கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறதாம். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காக்கிகளின் செயல்பாடும் ஏனோ மந்தமாக இருக்க, மேலிடத்துக்கு புகார் பறந்துள்ளதாம். விரைவில் உயர்மட்ட விசிட் இருக்கலாம் என்ற தகவலால் போலி சரக்கு கும்பல் கூண்டோடு சிக்க வாய்ப்புள்ளதால், உள்ளூர்வாசிகள் வழிமேல் விழிவைத்து காத்திருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பெண் தொழிலதிபருக்கு விசில் பார்ட்டியும், இலை கட்சியும் வலை வீசுவதாக பேசப்படுகிறதே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாநகரில் லாட்டரி தொழிலில் கோலோச்சி வந்த ஒரு தொழிலதிபரின் மனைவியான பூ பெயரை கொண்டவர், முதலில் அரசியல் தொடர்பு இல்லாமல் இருந்தார். ஆனால், இலைக்கட்சி ஆட்சியின் போது லாட்டரி தொழிலுக்கு தடை விதிக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில் மான்செஸ்டர் மாநகரில் கோலோச்சி வந்த லாட்டரி அதிபருக்கு, காவல்துறை மூலம் மிக கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டது.

இதில் பல இன்னல்களை அனுபவித்த லாட்டரி அதிபரின் மனைவி, இனி நமது சாத்வீக பாதை சரிப்பட்டு வராது, நாமும் அரசியல் கட்சியை சார்ந்து இருந்தால்தான் எதிரிக்கு விளையாட்டு காட்ட முடியும், என தீர்மானித்து, அரசியல் களத்தில் இறங்கினார். தற்போது, மூன்றெழுத்து பெயர் கொண்ட ஒரு கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். ஆனால், இவரை தங்கள் கட்சிக்கு இழுத்து விட வேண்டும் என இலைக்கட்சியும், விசில் பார்ட்டிகளும் கடுமையாக முயன்று வருகிறதாம்.

இந்த சூழலில் தான் சமீபத்தில் இலைக்கட்சி தலைமையை சந்திப்பு நடந்ததாம். ஆனால் பெண் தொழிலதிபரின் சில கண்டிஷன்களுக்கு இலைக்கட்சி சம்மதிக்காததால் முடிவை மாற்றிக்கொண்டாராம். இதற்கு பிறகு விசில் பார்ட்டிகள் தொடர்பு கொண்டார்களாம். ஆனாலும், இந்த பெண் தொழிலதிபர் இதுவரை `பிடி’ கொடுக்கவில்லையாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆளுங்கட்சியில் இணையும் முடிவில் இலை கட்சி மாஜி பெண் மந்திரி உள்ளாராமே...’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘எலக்‌ஷனுக்கான வேலைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தைகளும், கட்சி தாவல்களும் தொடர்ந்து வருது. இதுல, இலை கட்சி தலைமையின் கூட்டணி முடிவு, அந்த கட்சியில் உள்ள சிறுபான்மையினரை மிகவும் பாதித்துள்ளதாம். பாஜவுடன் கூட்டணி அமைத்தது தவறான முடிவு, என கட்சிக்குள் பேசி வருகிறார்களாம். அதனால் சிறுபான்மையினருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க இலை கட்சியின் மைனாரிட்டி பிரிவு நிர்வாகிகள் முடிவு எடுத்துள்ளார்களாம்.

முதல்கட்டமாக மிஸ்டர் பத்தூர் மாவட்டம் ரயில் சந்திப்பு சோலையான ஊருக்கு வரும் முதல்வரின் முன்னிலையில், வாணி பாடிய நகர் ஆட்சியின் மாஜி சேர்மேனும், மாஜி பெண் மந்திரியுமானவரு, தனது ஆதரவாளர்களுடன் ஆளுங்கட்சியில் ஐக்கியமாக உள்ளாராம். அப்படி ஐக்கியமாகும் அவருக்கு முக்கிய பொறுப்பு தரவும் ஆளுங்கட்சி முடிவு செய்துள்ளதாம். இதை அறிந்த இலை கட்சி தலைமை அந்த மாவட்ட மாஜி வீரமானவருக்கு கடுமையான டோஸ் விட்டதாம். இந்த விவகாரம் தான் இப்போ பரபரப்பு பேச்சா போய்கிட்டிருக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா.