Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மும்பை அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அராஜகம்: பெண் மருத்துவருக்கு ‘பளார்’ விட்ட ஆளும்கட்சி கவுன்சிலர்; ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

மும்பை: மும்பை மருத்துவமனையில் பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் ஆளும்கட்சி மாமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரிநகர் அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் காலியாக இல்லாததால் கர்ப்பிணி பெண் ஒருவர் மற்றொரு மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டார்.

இவ்விவகாரத்தால், நேற்று அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் மத்ரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து, அங்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்களை கொடூரமாக தாக்கினர். ரமேஷ் மத்ரே பெண் மருத்துவரை கன்னத்தில் அறைவது, மருத்துவமனை ஊழியரின் சட்டையைப் பிடித்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்தும், சம்பந்தப்பட்ட ஆளும்கட்சி கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மருத்துவமனைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கக் கோரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனை ஊழியர்களும் தங்களது பணிகளை முழுமையாக புறக்கணித்து திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.