ஆர்எஸ்எஸ் தலைவரின் மாணவர் சந்திப்பு இளைஞர்களுடன் உரையாடலை ஜென் ஸிக்கள் நடத்த வேண்டும்: சிஜேபி நிறுவனர் அபிஜித் கருத்து
சத்ரபதி சம்பாஜிநகர்: இளைஞர்களுடனான உரையாடலை ஜென் ஸி தலைமுறையினர் நடத்தினால் சிறப்பாக இருக்குமென கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே கூறி உள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்(75) ஆல்பா மற்றும் ஜென் ஸி தலைமுறை மாணவர்களுடன் நாளை கலந்துரையாட உள்ளார். நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் இருந்து 15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளது.
இது குறித்து கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கூறியதாவது: இளைஞர்களே இதற்கு காரணமாக அமைந்தனர். பிரதமர் மோடி இன்ஸ்டாகிராமில் ரீல் பதிவிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதே போல மோகன் பகவத்தும் ஜென் ஸி தலைமுறையினருடன் கலந்துரையாட விரும்புகிறார்.
தாமதமாக இருந்தாலும், ஜென் ஸி தலைமுறையினரை புறக்கணிக்கவோ, அலட்சியப்படுத்தவோ முடியாது என்பதையும் அவர்களுடன் பேச வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் இளைஞர்களுடன் உரையாடுபவர்கள் ஜென் ஸி அல்லது இளம் வயதினராக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஜென் ஸிக்களுக்கு இளம் வயது பிரதிநிதித்துவம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.


