அனைத்து அரசமைப்புகளையும் கைப்பற்றுவதே ஆர்.எஸ்.எஸ். திட்டம்: மக்களவையில் ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு
டெல்லி: அனைத்து அரசமைப்புகளையும் கைப்பற்றுவதே ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்களவையில் எஸ்.ஐ.ஆர். மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி; எந்த மாநிலத்துக்கு சென்றாலும் வெவ்வேறு நடை, உடை, பாவனைகளை பார்க்க முடியும். காஞ்சிபுரம் பட்டு சேலையில் தங்க சரிகை இருக்கும். தங்க சரிகையில் நூல்கள் சேர்க்காவிட்டால் அதில் ஒன்றும் இல்லை. இந்திய நாடு 140 கோடி மக்களால் பின்னி பிணையப்பட்ட ஒரு அற்புதமான துணி. இந்தியாவின் ஹெச்ஏஎல், பெல், சந்திரயான் போன்றவற்றின் சாதனைகளைப் பற்றி பேசுகிறோம். வாக்குகள் இல்லாமல் இந்தியாவின் பெருமைமிகு நிறுவனங்கள் இல்லை. இந்தியா என்ற இலையின் அங்கம்தான் மக்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் புரிந்துகொள்ளவில்லை. பாஜக தான் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்க வேண்டும், மற்றவர்கள் தனக்கு கீழ் என்று எண்ணுகிறது.
ஆர்.எஸ்.எஸ். சமத்துவத்தை ஏற்கவில்லை படி நிலைகளையே விரும்புகிறது. நாட்டின் ஒவ்வொரு உண்மையும் பெரும் நிறுவனங்களும் தனி மனிதரின் வாக்குகளால் உருவானவை. அனைத்து அரசமைப்புகளையும் கைப்பற்றுவதே ஆர்.எஸ்.எஸ் திட்டம். இவை அனைத்தும் கசப்பான உண்மைகள், ஆனால் பேசித்தான் ஆக வேண்டும். என் பேச்சு பாஜக உறுப்பினர்களுக்கு கடினமாக இருக்கும். இந்தியாவில் உள்ள அமைப்புகளை ஒவ்வொன்றாக கைப்பற்றியது ஆர்.எஸ்.எஸ். கல்வி நிறுவனங்களில் ஒருவர் பேராசிரியராக நியமிக்கப்படுவது அவரின் ஆர்.எஸ்.எஸ். சார்பே தீர்மானிக்கிறது என்று கூறினார். அப்போது ராகுல்காந்தியை பேச விடாமல் பாஜக உறுப்பினர்கள் அவையில் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து ராகுல் காந்தி பேசும்போது பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு குறுக்கிட்டு பேசினார்.
உங்கள் பேச்சு முழுவதும் கேட்கவே அமர்ந்திருக்கிறோம்; எஸ்.ஐ.ஆர். குறித்து மட்டும் உரையாற்றுங்கள் என்று கிரண் ரிஜிஜு தெரிவித்தார். ராகுல் காந்தி பேச்சை இடைமறுத்ததற்காக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி; வாக்குத் திருட்டு குறித்துதான் இந்த விவாதம் என்பது எனக்கு நன்றாக தெரியும். நீங்கள் ஓட்டை திருட வேண்டும் என்றால் அதற்கு அமைப்பை கைப்பற்ற வேண்டும்; அதனால் தான் அதைப் பற்றி பேசுகிறேன். துணை வேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை; அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ் சார்பின் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். நாட்டின் உளவு அமைப்புகளான ஐ.பி., சிபிஐ, அமலாக்கத்துறை அனைத்தையும் பாஜக கைப்பற்றி விட்டது. 3வதாக தேர்தல் ஆணையத்தை கைப்பற்றி விட்டார்கள் பாஜகவினர்.
ஆதாரங்கள் இல்லாமல் இந்த குற்றச்சாட்டை நான் கூறவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்களுடன் தேர்தல் ஆணையம் எப்படி கூடிக் குலாவுகிறது என்பது தெரியும். பாஜக சொல்படியே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. நாட்டின் தலைமை நீதிபதி மீதே நம்பிக்கை இல்லையா? தேர்தல் ஆணையரை நியமிக்கும் குழுவில் இருந்து ஏன் இந்தியாவின் தலைமை நீதிபதி நீக்கப்பட்டார்? பிரதமர் மோடியும் அமித் ஷாவும் குறிப்பிட்ட நபர்களை தேர்தல் ஆணையராக தீர்மானிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். மோடியும் அமித்ஷாவும் தேர்தல் ஆணையருக்கு சட்டப் பாதுகாப்பு எதற்காக வழங்குகிறார்கள்? தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் தற்போதைய பிரதமரை போல் எந்த பிரதமரும் தீவிரம் காட்டியது இல்லை. சுதந்திர இந்தியாவில் எந்த ஒரு பிரதமரும் தேர்தல் ஆணையருக்கு இதுபோன்ற சட்டப் பாதுகாப்பை வழங்கவில்லை.
இந்திய ஜனநாயகத்தை அழிக்க பாஜக தேர்தல் ஆணையத்துக்கு கட்டளையிடுகிறது. பிரதமரின் பிரச்சார வசதிக்காகவே பல கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. மோடியும் அமித்ஷாவும் தேர்தல் ஆணையருக்கு சட்டப் பாதுகாப்பு எதற்காக வழங்குகிறார்கள்? பாஜக அரசுக்கு தேர்தல் சீர்திருத்தம் செய்யும் எண்ணமே கிடையாது. சிசிடிவி பதிவுகளை அழிக்கும் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். வாக்குப் பதிவு எந்திரத்தில் என்ன இருக்கிறது என ஆய்வு செய்ய எங்களின் நிபுணர்களை அனுமதிக்க வேண்டும். நான் எழுப்பும் கேள்விகளுக்கு அமித் ஷா பதில் சொல்லியே தீர வேண்டும். சிசிடிவி பதிவுகள், தேர்தல் தரவுகள் தொடர்பான சட்டங்கள் திருத்தப்பட்டது ஏன்? பிரேசில் மாடல் 22 முறை ஹரியானா வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது எப்படி? சிசிடிவி பதிவுகளை தேர்தல் ஆணையம் அழித்துவிட சட்டம் இயற்றியது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர்; ஹரியானாவின் தேர்தல் முடிவுகள் திருடப்பட்டன. பிரேசில் நாட்டு அழகி படம் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது ஏன் என இதுவரை ஆணையம் பதில் தரவில்லை. தேர்தல் ஆணையருக்கு சட்டப் பாதுகாப்பு வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்து சட்டத்தை மாற்றி அமைப்போம்; உங்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம். இந்தியா பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, மகத்துவமான ஜனநாயக நாடு என்று கூறினார்.